ஆராய்ச்சி உதவித் தொகையை உயர்த்தி பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களின் ஆராய்ச்சி மீதான ஆர்வம், அவர்களின் குடும்பச் சூழல் காரணமாக தடைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மத்திய அரசு யுஜிசி மூலமாக உதவித் தொகைகளை வழங்கி வருகிறது.
இந்த உதவித் தொகையைப் பெற மாணவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தகுதி பெற வேண்டும். 
இந்தத் தகுதித் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களில் இளநிலை ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இதுவரை மாதம் ரூ. 25,000 வழங்கப்பட்டு வந்தது. அதுபோல முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 28,000 வழங்கப்பட்டது. 
இந்த உதவித் தொகை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான யுஜிசி அறிவிப்பு:
இதுவரை பிஎச்.டி., மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 25,000 மாத உதவித் தொகை, இனி ரூ. 31,000 ஆக வழங்கப்படும். முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 28,000 மாத உதவித் தொகை, இனி ரூ. 35,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதுபோல இவர்களுக்கான வீட்டு வாடகைப் படி, அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நகரம், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 8 சதவீதம், 16 சதவீதம் மற்றும் 24 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்படும். 
இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகை, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வருவதாகவும் யுஜிசி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here