கூடுதல் பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மூன்றாவது முறையாக வெளியிடப்படவுள்ள இப்புதிய தொழில் கொள்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
மேலும், ஆலைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கும், இணையதள நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் இப்புதிய கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.5 சதவீதமாக உள்ள தயாரிப்பு துறையின் பங்களிப்பை 25 சதவீதமாக அதிகரிக்கும் வகையிலான புதிய தொழில் கொள்கையை வடிவமைக்கும் பணி கடந்த 2016-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. 
அதற்கு ஏதுவாக, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான சலுகைகள், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற நிறுவனங்களின் உறுதிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. மின்னணுப் பொருள்கள், தொலைத்தொடர்பு கருவிகள், மின் உபகரணங்கள், மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் ஆகியவை பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, நமது நாட்டின் இறக்குமதி செலவினம் கணிசமாக அதிகரித்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், இறக்குமதிக்கான தெளிவான மாற்றுத் திட்டங்களை இப்புதிய தொழில் கொள்கையில் மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.

தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தொழில் கொள்கையில் வரிகளை குறைந்த விகிதத்தில் மாற்றியமைக்கவும், தொழில் தொடங்க எளிதில் நிதி கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில் முனைவோர் எளிதில் தங்களது தொழில்களை கட்டமைத்து நிர்வகிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி சீரமைப்பு என்று வரும்போது ஜிஎஸ்டி மற்றும் நிறுவன வரி ஆகிய இரண்டையுமே சீர்தூக்கிப் பாத்து தகுந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும். அத்துடன், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி உதவிக்காக தனி அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என புதிய தொழில் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் தொழில்துறை அமைச்சக அதிகாரிகள்.

தொழில் புரட்சி 4.0-வின் முக்கிய இலக்கு, தயாரிப்பு துறையில் செயற்கை நுண்ணறிவு, இணையதளம், ரோபாட்டிக்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதாகும். இது தொழில் துறைக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது சவாலானதே.
இந்தநிலையில், அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகளை நாம் மறுஆய்வுக்கு உட்படுத்துவது அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது. இதன்மூலம், இந்திய தொழில் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவு தக்க வைத்துக் கொள்வதுடன், தாய் நிறுவனங்களிலிருந்து தொழில்நுட்பங்களையும் பெற முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.
மதிப்புக் கூட்டு தொழில்முறையில் கவனத்துடன் முன்னேற வேண்டும்.இது, உள்ளூர் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, பெரிய நிறுவனங்கள் தங்களது பல்வேறு தொழில் கிளைகளை இங்கே உருவாக்கப் பேருதவியாக அமையும் என்கின்றனர் தொழில் துறை அமைச்சக அதிகாரிகள்.

தற்போது மூலப் பொருள்களுக்கான வரி விகிதம் அதிகமாகவே உள்ளது. இதற்கு நிதி அமைச்சகத்திடம் கலந்தாலோசித்து விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். இப்பிரச்னை வரும் பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பின் வரிவிதிப்பு கொள்கைகளின் கெடுபிடியால் , உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கும் கொள்கையை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது உள்நாட்டுத் தொழில் ஊக்குவிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன. எனவே, அது போன்ற சாத்தியக்கூறுகள் இருக்குமெனில் நாமும் அதனை செயல்படுத்த தயங்கக் கூடாது என்பதே தொழில்துறை அமைச்சக அதிகாரிகளின் கருத்தாகும்.

-அ.ராஜன் பழனிக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here