மருத்துவப் படிப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உளவியல் தாக்கங்களில் இருந்து நோயாளிகள்  விடுபடுவதற்காக சிறப்பு கலைக்கூடம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.30 லட்சம் செலவில் மருத்துவமனை ஊழியர்களின் குழந்தைகளுக்காக மழலையர் காப்பகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களுக்கு தானியங்கி முறையில் மாதிரிகளை அனுப்பும் கட்டமைப்பும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வசதிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மருத்துவ சேவைகளின் தரத்தை உயர்த்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாகவே இதுபோன்ற திட்டங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகின்றன. 
அரசு மருத்துவமனைகளின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதையே இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
 சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. 
அதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளதுடன்,  வழக்கம்போல பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே இங்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காத மத்திய அரசு, பிற மாநிலங்களில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் நிலையில், தமிழகத்திலும் அதே நடைமுறைதான் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்தது.
இருந்தபோதிலும், தமிழகத்தின் சூழல்களையும், ஏற்கெனவே உள்ள நடைமுறைகளையும் குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரில் மத்திய அரசு எடுக்கும் முடிவின்படி, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவப் படிப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் வழங்குவது குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுப்போம். 
இதனால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பாதிக்கப்படாது. 
அந்த 10 சதவீத இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதாக இருந்தாலும், கூடுதல் இடங்களைப் பெற்ற பிறகே அதை நடைமுறைப்படுத்துவோம் என்றார் அவர்.
இந்தச் சந்திப்பின்போது சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் பீலா ராஜேஷ்,  மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி  முதல்வர் டாக்டர் ஜெயந்தி, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here