சென்னை, -உள்ளாட்சி தேர்தலுக்கு, வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு, இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:சமீபத்திய லோக்சபா தேர்தல் வாக்காளர் பட்டியலை, உள்ளாட்சி வார்டுகள் வாரியாக பிரித்து, புகைப்படத்துடன் கூடிய, புதிய பட்டியல் தயாரிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த, 5.86 கோடி வாக்காளர்களை, அவரவர் வசிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், அவற்றில் உள்ள வார்டு வாரியாகவும் பிரித்து, வாக்காளர் பட்டியல், தனித்தனியே தயாரிக்க வேண்டும்.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் இருந்தும், தலா இரண்டு பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்ய, 28, 29ம் தேதிகளில், காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் உள்ள, மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிலையத்தில், பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சியில், 31 மாவட்டங்கள், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களின், கணினி தொழிற்நுட்ப பணியாளர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் மாநில தேர்தல் அலுவலக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்
இப்பயிற்சியை, மாநில தேர்தல் ஆணையர், பழனிசாமி, செயலர், ராஜசேகர் துவக்கி வைத்தனர். தேசிய தகவல் மைய இயக்குனர், ஜெயபாலன், மாநில தேர்தல் ஆணைய கணினி அதிகாரி விஜயராமன், பயிற்சி அளித்தனர்.இங்கு பயிற்சி முடித்தவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள, அனைத்து உள்ளாட்சி அமைப்பிற்கும், ஒரு வாரம் பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here