நிகழாண்டில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற வாய்ப்புள்ளதா? என்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.
மாநிலத்தின் நலன் கருதி பிளஸ் – 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு முயற்சியெடுத்து வருவதாகவும், ஆனால் இதுவரை அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
அதற்கான சுற்றறிக்கையை கடந்த ஆண்டே ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-இல் இடம்பெற்றுள்ள ஒரு ஷரத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த ஷரத்தை காரணமாகக் காட்டி கடந்த ஆண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர், மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால், நிகழாண்டில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக, தினமணி செய்தியாளரிடம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. அதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளதுடன்,  வழக்கம்போல பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே இங்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால், அதுதொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை. அதுமட்டுமன்றி, நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால், தமிழகத்திலும் அதே நடைமுறைதான் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருந்தபோதிலும், தமிழகத்தின் சூழல்களையும், ஏற்கெனவே உள்ள நடைமுறைகளையும் குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரில் மத்திய அரசு எடுக்கும் முடிவின்படி, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றார் விஜயபாஸ்கர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here