*புலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…?*

*- விஜி, கிருஷ்ணகிரி.*

” இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியை ஏற்க வேண்டும் ; அரசின் முடிவுகளை ஆசிரியர்கள் கேள்வி கேட்கக் கூடாது ” என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எண்ணி கலங்கி நிற்கும் ஆசிரிய சமூகமே…

இது தொடக்கமே, இன்னமும் தொடர உள்ள கல்வித்துறை சீரமை(ழி)ப்பில் கவலையும் வேதனையும் கொள்ள வேண்டியவை ; அனுபவிக்க வேண்டியவை ஏராளம் உள்ளன…

ஆசிரிய சமூகத்தின் உரிமைப் பறிப்புகளை தடுக்கும் திராணியற்று நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் ஆட்சியாளர்களின் கருணைக்கும் ஏங்கி நிற்கத் தொடங்கிய அவலம் எதனால் என்பதை இன்னமும் உணராததால் தான் நாம் இப்படி இருக்கிறோம்….

வர்க்க உணர்வற்று நுகர்வு கலாச்சார சுழற்சிக் கண்ணியில் சிக்கி போராட தயங்கியதன் விளைவு இது…

நவீன ஆடை, அணிகலன்கன், லேட்டஸ்ட் மாடல் மொபைல், டூர், ஹோட்டல், Snacks என வாழ்வை செலவளித்து பழகி வீடு, பைக், கார், பிரிட்ஜ், வாசிங் மெஷின் என EMIகளில் சிக்கிக் கொண்டு எதற்கும் போராட தயாரில்லாத சமூகமாய் ஆசிரியர்கள் மாறிப் போய் ஆண்டுகள் பல ஆகி விட்டன…

விதிவிலக்காய் ஓரிருவரும் ஓரிரு சங்கங்களும் …

பக்கத்து வீடு தீப்பற்றி எரிகையில் சற்றும் பதற்றமின்றி இருந்து விட்டு இன்று தன் வீடு பற்றி எரிந்து முதலுக்கே மோசம் வரும் நிலை வந்தபின் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுவதும் சபிப்பதும் எதற்கும் உதவாது…

அரசின் பொருளாதாரக் கொள்கை(ளை)கள் தவறு என்று வீதிக்கு வீதி இடதுசாரிகள் முழங்கிய போதும் மற்ற துறையில் தொழிற்சங்கங்கள் போராடிய போதும் யாருக்கோ வந்ததென வேடிக்கை பார்த்தோம்.. இன்று கல்வித்துறையில் கைவைக்கும்போது கூப்பாடு போடுகிறோம்.

ஆட்குறைப்பு, நியமனத்தடை என்று பிற துறைகளில் வேகமாய் அமல்படுத்தும்போது இணைந்து எதிர்க்காமல் கவனத்தை வேறெங்கோ வைத்ததன் விளைவு இன்று பணியிடம் சரண்செய்தல், உபரி – பணிநிரவல், பணியிறக்கம், துறைமாற்றம் கூடிய விரைவில் கட்டாய பணிஓய்வு (VRS)…

ஒப்பந்தப் பணி, மதிப்பூதியம், தொகுப்பூதியம் என மற்ற ஊழியர்கள் பாதிக்கப்படும் போது அவற்றை உணராமல் இருந்ததன் விளைவு இன்று பணிநியமனம் இன்றி கௌரவ ஆசிரியர், பகுதிநேர ஆசிரியர் என அத்த கூலிக்கு மாறி வருகிறோம். இந்த கூலிக்கு பழகுவதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து தக்க வைத்துக் கொண்டதால் தான் அரசு நமது போராட்டத்தை ஒடுக்க இது போன்ற தற்காலிக நியமனத்தை நமக்கெதிராய் பிரயோகித்து நம்மை குலைக்கத் தொடங்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை பராமரிக்காமல் ஒதுக்கீடின்றி சீரழித்து வருவதை (கண்முன்னே இப்போது BSNL), நட்டக் கணக்கு காட்டி மூடுவதை, விற்பதை எதிர்த்துக் குரல் எழுப்பாமல் இருந்ததால் இன்று அரசுப்பள்ளிகளை தனியார் நிறுவனங்களுக்கு தத்துக் கொடுக்கவும், 25% என தனியார் பள்ளிகளுக்கு தாரை வார்க்கவும், பள்ளிகளை இணைத்து குறைக்கவும், படிப்படியாய் அரசுப்பள்ளிகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்வதை
தடுக்க வழியற்று விழிபிதுங்கி நிற்கிறோம்.

பணிசார்/ சமூகப் பொறுப்புகளை உணர்ந்து கடைபிடிக்காமல் வீடு, பள்ளி என நேரக் கணக்காய்/ பாடப்புத்தகத்துடன் மட்டும் பணியை சுருக்கிக் கொண்டதன் விளைவு பொதுமக்களிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கிறோம். போராட்டங்களின் நியாயங்கள் வெளித் தெரியாமல் போவதும் போராட்டத்திற்கு எதிரான மனநிலை கட்டமைக்கப்படுவதும் இதனால் தான்…

ஒன்றிணைந்து சங்கப் பணிகளில் ஈடுபட்டோமா? தெளிவு பெற்றோமா? கல்வித்துறையின் ஊழலை கண்டித்தோமா? அம்பலப்படுத்தினோமா?
கல்விமுறை மாற்றங்கள், கற்றல் செயல்பாடுகள் குறித்து விவாதித்தோமா? ஆய்வு செய்தோமா? மாணவர்கள் பெற்றோர்களுடனான உறவை முறைப்படுத்தினோமா? ஜனநாயகப் படுத்தினோமா?
சமூக, அரசியல், பொருளாதார நிலைப்பாடுகளை கேள்விக்குட்படுத்தினோமா? உள்வாங்கினோமா? குறைந்தபட்சம் நம்மை நாம் அறிவில் மேம்படுத்திக் கொண்டோமா?

ஆயிரம் கேள்விகள் உண்டு ; பதில்கள் தான் இல்லை. குறைந்தபட்சம் தேடும் முயற்சி கூட இல்லை.

வழக்கம்போல் இதையும் வரிகளாய் வாசித்து அமைதியாய் கடந்து விடுவோம்…

ஆனால் இனிவரும் நமது வாழ்க்கை அமைதியாய் கடக்காது…

*மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை…*

*சுழன்றடிக்கும் காற்றில் வேரோடு பிடுங்கி வீசப்படும்வரை நிதானமாய் ஓய்வெடுப்போம்*

செயலற்று இருப்பதை தவிர்த்து வேறென்ன செய்யப் போகிறோம்?

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here