அச்சுக் காகிதங்களின் விலை உயர்வால் பள்ளி நோட்டுப் புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என சிவகாசியில் உள்ள பள்ளி நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகாசியில் பள்ளி நோட்டுப் புத்தகம் தயாரிக்கும் பணியில் சுமார் 15 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் நோட்டுப் புத்தகங்கள் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் நோட்டுப் புத்தகங்களில்எழுதும் போது மை உறியாது என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஒரு சில நிறுவனங்கள் நோட்டுப் புத்தகங்களை முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலம் தயார் செய்கின்றன. பல நிறுவனங்கள் கையினால் மடிப்பது, பைண்டிங் செய்வது என தொழிலாளர்கள் மூலமாகவும் தயாரிக்கிறார்கள். அச்சுக் காகித விலை உயர்வால் இந்த ஆண்டு நோட்டுப் புத்தகங்கள் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து நோட்டுப் புத்தகம் தயாரிப்பாளர் காந்தீஸ்வரன் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதால் சிவகாசியில்தரமான நோட்டுப் புத்தகங்களையே தயாரிக்கிறோம். அறிவியல், கணிதம், இரட்டைக்கோடு, நான்கு கோடு என 16 வகையான நோட்டுகளைத் தயாரிக்கிறோம். ஒரே நோட்டில் இரண்டு, மூன்று, நான்கு கோடுகளும் மற்றும் கட்டம் போடப்பட்டும் உள்ள (செக்டு) நோட்டுகளையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளோம். இந்த நோட்டுகளை எல்.கே.ஜி. முதல் முதல் வகுப்பு மாணவர்கள் வரை பயன்படுத்தலாம்.  அச்சுக் காகிதம், காகித அட்டை உள்ளிட்டவைகளின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு  அதிகரித்துள்ளது.

இதனால் நோட்டுப் புத்தகங்களின் விலையை 10 முதல் 15 சதவீதம்  வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்க குறிப்பிட்ட காகிதங்களையே பயன்படுத்துவதால், அந்த காகிதத்திற்கு முன்பணம் செலுத்தினால்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. நாங்கள் ஆண்டு முழுவதும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இதனால் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும், குறிப்பிட்ட நேரத்தில் விநியோகமும் செய்ய முடிகிறது.எனவே தமிழக அரசு நோட்டுப்புத்தகம் தயாரிக்க சலுகை விலையில் அச்சுக் காகிதம் வழங்கினால், நோட்டுப் புத்தகங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல ஊர்களில் நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டாலும், சிவகாசியில்தயாரிக்கப்படும் நோட்டுகள் தரமாக இருப்பதால் இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here