தமிழகத்தில் பள்ளி வாகன தரச் சோதனையின்போது, 1, 263 வாகனத்துக்கு சிறப்புத் தணிக்கைச் சான்று வழங்க போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது.
கடந்த 2012 -ஆம் ஆண்டு, சென்னையில் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த சிறுமி உயிரிழந்ததை அடுத்து, கோடை விடுமுறை முடிந்த பிறகு சிறப்புத் தணிக்கை செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் இருந்து பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. 
இதனை போக்குவரத்துத் துறை, கல்வித் துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக மே 17 -ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில், மோட்டார் வாகனச் சட்டத்துக்குட்பட்டு இயக்கப்படாத  1, 263 பேருந்துகளுக்கு சிறப்பு தணிக்கைச் சான்று வழங்க போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது.
அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 184 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், வேலூர் மாவட்டத்தில் 154 வாகனங்களுக்கும் ,  நாமக்கல் மாவட்டத்தில் 149 வாகனங்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 140 வாகனங்களுக்கும்  மறுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  சேலம் மாவட்டத்தில்

2, 603 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,233 வாகனங்களும், கோவை மாவட்டத்தில் 2,015 பள்ளி வாகனங்களும் இயக்கப்படுகின்றன.
 இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி கூறியது: சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 34,598 பள்ளி வாகனங்களில் மே 17 -ஆம் தேதி வரை 10,549 வாகனங்களுக்கான சோதனை முடிவடைந்துள்ளது. இதில் 1,263 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பெரிய அளவில் பழுதடைந்த வாகனங்கள் எதுவும் இல்லை. சிறு சிறு குறைகள் மட்டுமே உள்ளன. இந்த வாகனங்கள் குறைகளைச் சரி செய்வதுடன், தகுதிச் சான்று பெற்று மறு தணிக்கைக்கு வாகனத்தை எடுத்து வர வேண்டும். அனுமதி பெற்ற பிறகே அனைத்து பள்ளி வாகனங்களும் இயக்கப்பட வேண்டும் என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here