தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடை நிலை ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடை நிலை ஆசிரியர்களை நியமிக்கத் தடை விதிக்கவும், இதற்காக தொடக்க கல்வித்துறையின் கீழ் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை சமூக நலத்துறைக்கு மாற்றம் செய்வதை தடை விதிக்கவும், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் கொண்ட  அமர்வில்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவது மாநில அரசின் கடமையாகும். இதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 முதல் 5 வயது குழந்தைகளின் சுகாதாரம், கல்விக்காக அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களால் கல்வி அறிவு சதவீதம் அதிகரித்துள்ளன. மேலும் குழந்தைகளின் சத்துக் குறைபாடும் குறைந்துள்ளன.
தமிழகத்தில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள  2,381 அங்கன்வாடி மையங்களில் 52,933 குழந்தைகளுக்காக எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும், சமூகத்தின் தேவையை கருத்தில் கொண்டும் அரசு ஒரு கொள்கை முடிவெடுக்கும் போது அதில் தலையிட நீதிமன்றத்துக்கு குறிப்பிட்ட அளவு அதிகாரமே உள்ளது.
அந்த கொள்கை முடிவு தன்னிச்சையானதாக இல்லாமலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகவும் இல்லாத நிலையில், கொள்கை முடிவு சரியா? தவறா? என்பதை ஆய்வு செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு பதில், கூடுதலாக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ள அரசுக்கு அனைத்து உரிமையும் உண்டு.
கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.445 கோடி வீணாகிறது. இதைத் தடுக்க கூடுதலாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ள நினைப்பது தவறில்லை. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைக்கப்படாது. பணி நிலை, பணி மூப்பில் மாற்றம் ஏற்படாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏழை குழந்தைகளுக்கு மழலையர் கல்வியை இலவசமாகவும், தரமாகவும் வழங்கும் தமிழக அரசின் முடிவைப் பாராட்ட வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும். எனவே, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், தமிழக அரசு ஜூன் 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்க வேண்டும். வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு 6 மாதம் மழலையர் கல்வி பயிற்சியும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here