கோவை மண்டல அறிவியல் மையத்துக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில், ஒரு லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்; மாணவர்கள் பயன்பெறும் வகையில், இன்னும் மூன்று மாதத்தில், ‘இன்னோவேட்டிவ் ஹப்’ பயன்பாட்டுக்கு வருகிறது.அறிவியல் ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், கடந்த, 2013ல், கோவை – அவிநாசி ரோடு, கொடீசியா அருகே, 8.50 கோடி ரூபாய் மதிப்பில், மண்டல அறிவியல் மையம் உருவாக்கப்பட்டது.
மொத்தம், 6.83 ஏக்கர் பரப்பளவில், கோளரங்கம், 3டி அரங்கம், கேளிக்கை அறிவியல் காட்சியரங்கு, ஜவுளி அரங்கம், பொருட்கள் இயங்கும் விதம் குறித்த காட்சியரங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.இம்மையத்துக்கு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். பொதுமக்களும், அறிவியல் ஆர்வலர்களும் வருகின்றனர். தேசிய விடுமுறை தினங்களை தவிர, அனைத்து நாட்களிலும், தினமும் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படுகிறது.பெரியவர்களுக்கு, 35 ரூபாய், சிறியவர்களுக்கு, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சிறு கோளரங்கத்தை பார்வையிட, பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு, 20 ரூபாய் கட்டணம். இம்மையத்தை, கடந்த மூன்று ஆண்டுகளில், ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

கடந்தாண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு அறிவியல் மையத்தை பார்வையிடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக, மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறுகையில், ‘அறிவியல் அடிப்படை தத்துவங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களிலும் கூட பெற்றோருடன் அதிகமான மாணவர்கள் வருகை தருகின்றனர். பள்ளிகளில் இருந்தும் மாணவர்களை குழுவாக அழைத்து வருகின்றனர். இன்னும் மூன்று மாதத்துக்குள் ‘இன்னோவேட்டிவ் ஹப்’ பயன்பாட்டுக்கு வரும். இயற்பியல், வேதியியல், ‘ரோபோடிக்ஸ்’, மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் மாணவர்களுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்க உள்ளனர்,’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here