கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்) பதிவேற்றத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நாகராஜமுருகன் அறிவுறுத்தல்.

புதுக்கோட்டை,மே.14: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ் ) பதிவேற்றத்தினை முழுமை பெற செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர்( பணியாளர் தொகுதி) நாகராஜமுருகன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பள்ளிக் கல்வி இணைஇயக்குநர் ( பணியாளர் தொகுதி) நாகராஜமுருகன் கூறியதாவது: கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் விபரங்கள்,ஆசிரியர் நிர்ணயம் செய்தல் ஆகியவை சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க
வேண்டும்.

2019-2020 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பணி பொது மாறுதல் கலந்தாய்வு,பதவி உயர்வு கலந்தாய்வு போன்ற அனைத்து நடைமுறைகளும் பள்ளித் தகவல் மேலாண்மை முறைமை ( எமிஸ்) இணையதளத்தின் மூலமே நடைபெறும்.பள்ளி தகவல் மேலாண்மை முறைமையில் (எமிஸ்) பெயரில்லாத ஆசிரியர்கள் எவ்வித கலந்தாய்விலும் கலந்து கொள்ள இயலாது.1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் பள்ளித் தகவல் மேலாண்மை முறைமை மூலம் பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர் வழங்குதல் வேண்டும். பள்ளித் தகவல்கள் ,கல்வி சார் புள்ளி விவரங்கள் ,பள்ளி அமைந்துள்ள நிலம் தொடர்பான விபரங்கள்,குடிநீர் மற்றும் கழிவறைகள் ஆகிய பள்ளி சார்ந்த விபரங்கள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணைய தளத்தில் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.நர்சரி பள்ளி,தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடர்பான பள்ளி வரையறைகள் , புதிய மாணவர்கள் சேர்க்கையை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை மூலம் ( எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகை,புதியதாக அறிமுகப்படுத்த இருக்கும் மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம்,தொடுநர் கருவியின் வாயிலான பயோ மெட்ரிக் ஆசிரியர் வருகைப் பதிவு,பாட வேளை அட்டவணை , 2009 இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை போன்ற பள்ளி சார்ந்த தகவல்களை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.இப் பணிகளில் நிலுவை இருப்பின் ஓரிரு நாட்களில் குழுக்கள் அமைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

ஆய்வுக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ( பொறுப்பு) பாலுமுத்து, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.இராகவன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்திட்டத்தின் மாவட்ட உதவிதிட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஜீவானந்தம்,நேர்முக உதவியாளர் ( உயர்நிலை) கபிலன் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் மற்றும் சென்னை சென்று கல்வித் தகவல் மேலாண்மை முறைமை பயிற்சி பெற்ற கணினி பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here