சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியலை விரைந்து தயாரித்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2011ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 ஆகஸ்டில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகளை மறுவரையறை செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்தது.
அதைத் தொடர்ந்து வார்டுகள் மறுவரையறை பணியை மாநில தேர்தல் ஆணையம் துவக்கியது. அதன் பின் நீதிமன்றம் தேர்தல் நடத்த உத்தரவிட்டும் அரசு பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலை நடத்தாமல் உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ‘தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை சரிபார்க்க முடியவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்தும் வாக்காளர் பட்டியலை பெற முடியவில்லை. இதனால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த முடியவில்லை’ என கூறப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் இது எதிரொலிக்கவே உடனடியாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார். உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் லோக்சபா தேர்தல் முடிந்ததும் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியலை சரி செய்யும் பணி நடந்து வருகிறது’ எனக் கூறி தேர்தல் நடத்த நீதிமன்றத்தில் மூன்று மாதம் அவகாசம் பெற்றிருந்தது.
இச்சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை விரைந்து தயாரித்து வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டும். அதன் விபரத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மாவட்ட, ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி, தேர்தல் அலுவலர்கள் வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, பெயர், வார்டு எண், பாகம் எண் போன்றவை இடம் பெற வேண்டும்.
அதேபோல் ஓட்டுச்சாவடி பெயர், ஓட்டுச்சாவடி எண், ஓட்டுச்சாவடி வகை இடம் பெற வேண்டும். வாக்காளர் பெயர், தந்தை அல்லது கணவன் பெயர், வீட்டு எண், வயது, பாலினம் போன்றவையும் இடம் பெற வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு நடைமுறை எத்தனை நகல் அச்சிடப்பட வேண்டும் என்பது போன்ற விபரங்களும் அரசாணையில் விவரிக்கப்பட்டு உள்ளன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here