பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்தத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும்  இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் உடனடி துணைத் தேர்வின் செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. எழுத்துத் தேர்வை மீண்டும் எழுத தேவையில்லை.
அதேபோல், செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை,  எழுத்துத் தேர்வு இரண்டையும் எழுத வேண்டும். செய்முறை, எழுத்துத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்கள் எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது.

கட்டணம்: ஒரு பாடத்துக்கு ரூ.50 உடன் இதரக் கட்டணம் ரூ.35,  இணையதளப் பதிவுக் கட்டணம் ரூ. 50 சேர்த்து  செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கான கால அட்டவணையை ww.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here