கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தகல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம்கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவு தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்திமற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன.இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கான 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

அதேபோல் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த படிப்புகளுக்கு 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஜூன் 10-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனிலேயே தகுந்த சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் ஒவ்வொரு படிப்புக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக வரும் ஜூன் 10-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவர், சேர்க்கைக் குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை – 600 051 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here