தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2019-20 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதன்கிழமை (மே 8) முதல் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 27 இணைப்புக் கல்லூரிகள் மூலம் இளம் அறிவியல் (ஹானர்ஸ்) வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்தியல் – உணவு முறையியல், பட்டு வளர்ப்பு, வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பவியல், ஆற்றல் – சுற்றுச்சூழல் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், வேளாண் வணிக மேலாண்மை ஆகிய 10 பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இவற்றில் வேளாண்மை பட்டப் படிப்புக்கு 3,105 இடங்கள், தோட்டக்கலை படிப்புக்கு 315 இடங்கள், வேளாண்மைப் பொறியியல் படிப்புக்கு 110 இடங்கள் உள்பட 10 படிப்புகளுக்கு மொத்தம் 3,905 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் புதன்கிழமை தொடங்குகின்றன.
அதன்படி, பட்டப் படிப்புக்கு தகுதி பெற்றுள்ள மாணவ-மாணவிகள், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் (www.tnau.ac.in/ugadmission.html) வாயிலாக விண்ணப்பத்தை இணையதளம் மூலமே பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்பக் கட்டணத்தையும் இணையதளம் மூலமே செலுத்தலாம். விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யஜூன் 7-ஆம் தேதி கடைசி நாள். பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை ஜூன் 10 முதல் 12-ஆம் தேதி வரை 3 நாள்களில் திருத்தம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாணவர்களின் தரவரிசை, விருப்பத்துக்கு ஏற்ப இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் நிலையில், அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும். மேலும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுதாரர்களுக்கு கலந்தாய்வு தனியாக நடத்தப்படும். சிறப்பு ஒதுக்கீடுதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல இணையதள கலந்தாய்வில் பங்கேற்பவர்களுக்கு கோவையில் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி நடைபெறும் என்றும், காலியிடங்களை நிரப்புவதில் விருப்ப அடிப்படையிலான நகர்வு முறை கடைப்பிடிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here