அரசு பள்ளிகளில் விரும்பும் பாடத்தில் பிளஸ் 1 சேர்க்கை

அரசு பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான, எந்த பாடப் பிரிவையும் அகற்றக்கூடாது’ என, மாவட்ட முதன்மை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.தமிழக பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், ஏப்., 29ல் வெளியாகின. இதில், தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து வருகின்றனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப, அவர்களுக்கு, பிளஸ் 1 பாட பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன. 

அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன. நடுத்தர மதிப்பெண் பெற்றவர்களுக்கு, பொருளியல், வணிகவியல் பிரிவுகளும், மற்ற பிரிவினருக்கு வரலாறு, தொழிற்கல்வி பிரிவுகளும் வழங்கப்படுகின்றன. இவற்றில், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, 20க்கும் குறைவாக இருந்தால், அந்த பாடப் பிரிவுகளை மூடிவிட்டு, மற்ற பாடப் பிரிவுகளில் சேருமாறு, மாணவர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் எதிர்பார்க்கும் பாடப் பிரிவுகளுக்கு, அரசு அனுமதி அளித்திருந்தாலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்த பாடப் பிரிவுகளில் மாணவர்களை சேர்ப்பதில்லை என, கூறப்படுகிறது. 

இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவின்படி, எந்த அரசு பள்ளியிலும், பிளஸ் 1 பாடப் பிரிவு எதையும் நீக்கக் கூடாது.மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளில், அவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here