தமிழகம் முழுவதும், பிளஸ் 2 முடித்த, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மையம் தெரிவித்துள்ளது.இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் இன்ஸ்டிடியூட் தென் மண்டலம் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை இடையே, கடந்த ஆண்டு ஜூன் 5ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்(சி.ஏ.,) படிப்பு தொடர்பாக, கோவை, ஈரோடு, கிழக்கு தாம்பரம், மதுரை, சேலம், சிவகாசி, திருச்சி, கும்பகோணம், நெல்லை, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய 12 மையங்களில், கடந்த 2ம் தேதி முதல் ஆலோசனை வழங்கப்படுகிறது.

வரும் 31ம் தேதி வரை தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை 5 வரை, வல்லுனர்களின் ஆலோசனைகளை, மாணவர்கள் பெறலாம்.சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் இன்ஸ்டிடியூட் தென் மாநிலங்களின் செயலர் ஜலபதி கூறியதாவது: இதுவரை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, சி.ஏ., படிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, 15 நாள் பயிற்சி முகாம் மேற்கொள்ளவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.சி.ஏ.. படிப்பது கடினம் என்ற எண்ணம், பல மாணவர்களிடையே உள்ளது. மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருந்தால், சி.ஏ., படிப்பில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.

‘நீட்’ தேர்வுக்கு தயாராவதற்கான விழிப்புணர்வை பெற்றுள்ளது போல், சி.ஏ., படிப்பிலும் மாணவர்கள் அக்கறை காட்டலாம். தினமும் ஐந்து மணி நேரம் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்த வேண்டும்.சி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள் பலரிடம், ஆங்கில அறிவு என்பது சற்று குறைவாக உள்ளது. ஆங்கில அறிவை மேம்படுத்தினால், வெற்றி பெறுவது எளிது. கிராமப்புற மாணவர்களில், பள்ளிகளில் முதல் 10 இடங்களுக்குள் வரும் மாணவர்கள், சி.ஏ., படிப்புக்கு ஏற்றவர்களாக இருப்பர். ஆனால், இதுதொடர்பான விழிப்புணர்வு மாணவர்களிடம் இன்னும் வரவில்லை.மாநிலம் முழுவதும் வணிகவியல் ஆசிரியர்கள் 350 பேருக்கு, சி.ஏ., படிப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விளக்கமளிக்க ஏதுவாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்துக்கு, இரண்டு சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்களுடன், ஒரு ஆசிரியரும் கல்வி ஆலோசனைக்குழுவில் இடம்பெற்று, செயல்பட்டு வருகின்றனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறை நல்ல ஒத்துழைப்பு வழங்குவதால், எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து சி.ஏ., படித்து வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here