தமிழ் படிச்சு என்னங்க ஆகப்போகுது…பேசாம பி.காம் சேர்த்து விட்டுருங்க…பேங்குலயாவது வேலை கிடைக்கும்’- இப்படி பெற்றோர்களை தவறாக வழிநடத்தும் கல்வியாளர்களே …உங்களுக்கு தெரியுமா தமிழ் படித்தால் உள்நாட்டில் மட்டுமல்ல…வெளிநாடுகளிலும் எக்கச்சக்க வாய்ப்புகள் உள்ளன என்பது!

மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், வணிகவியல் பட்டப்படிப்புகளை பற்றி அறிந்திருக்கும் பெற்றோர், மாணவர் பலருக்கும், மொழிப்பாடங்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை. குறிப்பாக, தமிழ் மொழியில் பட்டம் பெற்றவர்களுக்கு, இருக்கும் வாய்ப்புகள் பற்றி, படித்தவர்கள் கூட அறியாமல் உள்ளனர்.

பாரம்பரியத்தின் மொழி!

தமிழ் படித்தவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து, பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லுாரி தலைவர் மற்றும் செயலாளரான, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் கூறியதாவது:மொழி என்பது தன் கருத்தை மற்றொருவரிடம் பகிரும் சாதனம் மட்டுமல்ல; நம் பண்பாட்டை, ஒழுக்க வழக்கங்களை, பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதே மொழி.அற இலக்கியங்கள், சங்க இலக்கியங்களை படிக்கும் மனிதன், அந்த மொழியோடு சேர்ந்து வளப்படுகிறான்; பண்படுகிறான். ஒரு மனிதன் முழு மனிதனாக மாறுவதற்கு, வாழ்நாள் முழுவதும், மொழியோடு சார்ந்திருக்க வேண்டும்.வேறு பாடம் கிடைக்காவிட்டால், மொழிப்பாடத்தில் சேரலாம் என்ற நிலை இருக்கிறது. இதற்கு, அரசின் கொள்கைகள், பெற்றோரின் மனப்பான்மை முக்கிய காரணம். இது மாற வேண்டும்.

அரசு தேர்வில் வெற்றி’

தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது’ என்ற சிந்தனை மட்டும்தான், மாணவர், பெற்றோரிடம் சென்று சேர்ந்திருக்கிறது. மொழிப்பாடம் படித்தவர்கள், தமிழாசிரியராக மட்டும்தான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை.அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில், 50 விழுக்காடு கேள்விகள் தமிழ் மொழிப்பாடத்தில் இருந்தே கேட்கப்படுகின்றன.ஒரு காலத்தில், ஆங்கிலம், இந்தி தெரிந்தால்தான், மத்திய தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது தமிழ் மொழியிலும், அந்த தேர்வை எழுத முடியும். நிறையப்பேர் தமிழ் படித்தும் வெற்றி பெறுகின்றனர்.கல்வெட்டு ஆராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சி, இலக்கிய மொழி பெயர்ப்பு பணிகளுக்கு தமிழ் படித்தவர்கள் தேவைப்படுகின்றனர்.

இது தவிர, உலகின், 150 நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்.

அவர்களது குழந்தைகளுக்கு, தமிழ் படிக்கும் தேவை இருக்கிறது. மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்காவில் இருந்தெல்லாம், தமிழாசிரியர்கள் தேவை என்று கேட்கின்றனர்.உலகின் வெவ்வேறு பிரபல பல்கலைகளில், தமிழ் இருக்கை உருவாக்குகின்றனர். அதற்கு தமிழ் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, தமிழ் மொழியை, ஆழமாக கற்றால், உலகம் முழுவதும் வாய்ப்புகள் உள்ளன என்பதை பெற்றோரும், மாணவர்களும், மனதில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, சாந்தலிங்க மருதாசல அடிகள் தெரிவித்தார்.

வேறு பாடம் கிடைக்காவிட்டால், மொழிப்பாடத்தில் சேரலாம் என்ற நிலை இருக்கிறது. இதற்கு, அரசின் கொள்கைகள், பெற்றோரின் மனப்பான்மை முக்கிய காரணம். இது மாற வேண்டும்.ஒரு காலத்தில், ஆங்கிலம், இந்தி தெரிந்தால்தான், மத்திய தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது தமிழ் மொழியிலும், அந்த தேர்வை எழுத முடியும். நிறையப்பேர் தமிழ் படித்தும் வெற்றி பெறுகின்றனர்.

‘பாரதியாரே…’ இது நியாயமா?

சாந்தலிங்க மருதாசல அடிகள் கூறுகையில், ”சென்னை பல்கலை, பாரதிதாசன் பல்கலை எல்லாம், மொழிப்பாடங்களை நான்கு பருவங்கள் கற்பித்து வருகின்றனர். ஆனால், தமிழுக்காக பாடிய பாரதியின் பெயரில் இருக்கும், கோவை பாரதியார் பல்கலையில், முதல் இரண்டு பருவங்கள் மட்டுமே, தமிழ் கற்பிக்கப்படுகிறது; இது ஒரு தவறான போக்கு,” என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here