முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகமே வழக்கம்போல் நடத்துகிறது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். எம்.பிளான் போன்ற முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வை (டான்செட்) நடத்துகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் உள்ள முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வை (ஏ.யு.சி.இ.டி.) மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த தனி நுழைவுத்தேர்வுக்கு 6-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டும் இருந்தது. சூரப்பாவின் இந்த அறிவிப்பால் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு தனியாக ஒரு நுழைவுத்தேர்வும், பிற கல்லூரிகளுக்கு ஒரு நுழைவுத்தேர்வும் எழுத வேண்டுமா? என்று மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
அதேசமயம், தனி நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பட்சத்தில், வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை யார் நடத்த போகிறார்கள்? என்ற கேள்வியும் எழுந்தது. இது மாணவ-மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று உயர் கல்வித்துறை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை வைத்தது.
அதன் அடிப்படையில், தனி நுழைவுத்தேர்வு நடத்துவதா? அல்லது ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை நடத்துவதா? என்பது குறித்து துணைவேந்தர் சூரப்பா தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தின் முடிவில் சூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், ‘ஏற்கனவே அறிவித்தபடி தனியாக நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்பட மாட்டாது. ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும். இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முழு பொறுப்பு ஏற்கும்’ என்றார்.
இந்த அறிவிப்பின் மூலம் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு என்று எதுவும் கிடையாது. அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல நடத்தும் ‘டான்செட்’ என்ற ஒரே நுழைவுத்தேர்வு தான் நடத்த இருக்கிறது.
தனி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே கொடுத்திருந்த அறிவிப்பை வாபஸ் பெற்று, இன்னும் ஓரிரு நாட்களில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணைவேந்தர் சூரப்பாவுக்கும், உயர் கல்வி துறைக்கும் ஆரம்பத்தில் இருந்தே சத்தமில்லாமல் பிரச்சினை இருந்து வருகிறது. ஏற்கனவே என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு நடத்த முடியாது என்று சூரப்பா தெரிவித்தார். அதையடுத்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்த இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக வழக்கமாக நடத்தி வரும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கு பதிலாக தனியாக ஒரு நுழைவுத்தேர்வை நடத்த போவதாக சூரப்பா அறிவித்தார். தற்போது அந்த முடிவில் அவர் பின்வாங்கி இருக்கிறார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here