தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்களுக்கான பதவி காலம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை, ‘டிஸ்மிஸ்’ செய்வதா அல்லது தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு அளிப்பதா என, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

நாடு முழுவதும், கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம், 2009ல் அமலுக்கு வந்தது. அதன்படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ‘டெட்’ என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், 2010 ஆகஸ்ட், 23ல் உத்தரவிட்டது. இதையடுத்து, 2010க்கு பின் பணியில் சேரும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்த அவகாசம், ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, மார்ச், 2019க்கு மேல் அவகாசம் கிடையாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான, மத்திய அரசின் மானியமும்,மார்ச்சுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்களை, இனி பணியில் நீடிக்க விட வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்துவதற்கு, நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலையில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்வதா அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தகுதி தேர்வில் பங்கேற்க, மீண்டும்அவகாசம் வழங்குவதா என, சட்ட ஆலோசனை துவங்கியுள்ளது.
நான்கு முறையும், ‘பெயில்’

பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் உத்தரவுப்படி, ‘டெட்’ என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என, 2010 ஆக., 23ல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின், 2012 ஜூலை, 12; அக்., 10 மற்றும், 2013 ஆக., 17 ஆகிய தேதிகளில், ‘டெட்’ தேர்வு நடத்தப்பட்டது.

இறுதியாக, 2017 ஏப்., 30ம் தேதியும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நான்கு வாய்ப்புகளிலும், 1,500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஊதியம் வழங்குவதற்கான, மத்திய அரசின் மானியம், மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, அடுத்த நடவடிக்கை துவங்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here