பூசணிக்காயின் மருத்துவப்பண்புகள்

கண்களின் நலம் மற்றும் ஆரோக்கியமான பார்வைக்கு

கண்களின் நலம் மற்றும் ஆரோக்கியமான பார்வைக்கு பூசணியில் உள்ள விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடீன் அதிகளவு உதவுகிறது.

எதிரில் வரும் ஒளிக்கற்றைகளின் அளவிற்கு ஏற்ப கண்ணின் கருவிழிப்படலத்தை எளிதில் சுருக்கவும், விரிக்கவும் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடீன்கள் உதவுகின்றன.

பூசணிக்காயினை உண்டு விட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படும் உலர் கண் நோயைத் தடுக்கலாம். சிறுகுழந்தைகளுக்கு பூசணியை துண்டுகளாக்கியோ, சூப்பாகவோ அடிக்கடி உண்ணக் கொடுக்கலாம்.

இதனால் குழந்தைகள் பெரியவர்களாகும்போது கண்புரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. 100 கிராம் பூசணிக்காய், அன்றாடத் தேவைக்கான விட்டமின் ஏ-வினை பூர்த்தி செய்கிறது.

 

நோய் எதிர்ப்பாற்றலைப் பெற

நோய் தடுப்பாற்றலே நமது உடலின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. நோய் எதிர்ப்பாற்றலானது நமது உடலினை நோய் கிருமிகள் தாக்காவண்ணம் பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலைப் பெற நாம் விட்டமின் ஏ,சி, பீட்டா கரோடீன், ஸீஸாத்தைன் ஆகியவை உள்ள பூசணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலின் நோய் தடுப்பாற்றலை உயர்த்துகிறது.

 

அனீமியா குறைபாட்டினை நீக்க

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது அனீமியா நோய் ஏற்படும். ஹீமோகுளோபின் என்ற சிவப்புநிற நிறமியானது உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸினைக் கொண்டு செல்கிறது.

அனீமியாவால் தூக்கம், தலைசுற்றல், மயக்கம், தலைவலி, நாக்கு வெளிருதல் போன்றவை ஏற்படும். பூசணிக்காயில் உள்ள இரும்பு சத்து மற்றும் விட்டமின் பி12-ஆனது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை உயர்த்துகிறது.

விட்டமின் பி12 அரிக் இரத்த அனீமியா என்றழைக்கப்படும் அரிதான இரத்த கோளாறு சிகிச்சையளிக்க மிகவும் பயனள்ளதாக இருக்கிறது. எனவே பூசணியை உட்கொண்டு அனீமியாவை விரட்டலாம்.

 

இதய நலத்திற்கு

பூசணிக்காயில் உள்ள பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதனால் இதய தசைகள் சீராக இயங்குகின்றன. மேலும் பூசணிக்காயானது இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது.

பூசணியில் உள்ள விட்டமின் சி-யானது இரத்தக்குழாய்களை பாதுகாத்து பெருந்தமனி தடிப்பு மற்றும் இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. எனவே பூசணியை அடிக்கடி உணவில் சேர்த்து இதய நலத்தைப் பேணலாம்.

 

சுவாச கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெற

விட்டமின் சி மற்றும் விட்டமின் இ சேர்க்கையானது சுற்றுசூழலின் தாக்கத்தினால் ஏற்படும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை சரி செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே விட்டமின் சி மற்றும் இ உள்ள பூசணிக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து சுவாச கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

 

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு

விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்) தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அவசியமானது. தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோனை உற்பத்தி செய்யவும், சேமிக்கவும், ஹார்மோனை இரத்தத்தில் கலக்கச் செய்யவும் ரிபோஃப்ளோவின் உதவுகிறது.

தைராய்டு ஹார்மோன் நமது உடல் பயன்படுத்தும் ஆற்றலின் அளவினை ஒழுங்குபடுத்துகின்றன. தைராய்டு ஹார்மோன் மனநிலை, செயல்பாடு, உடலின் எடை அதிகரிப்பு மற்றும் எடை குறைப்பினை தீர்மானிக்கின்றது.

பி2 விட்டமின் குறைபாடு தைராய்டு சுரப்பின் செயல்பாட்டினைப் பாதிக்கிறது. இதனால் மந்தநிலை, சோர்வு, தெளிவின்மை ஏற்படுகிறது. பூசணியில் விட்டமின் பி2 அதிகம் உள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் உட்கொண்டு தைராய்டு சுரப்பினை சீராக செயல்படச் செய்யலாம்.

 

ஆரோக்கியமான உடல் எடை குறைப்பிற்கு

பூசணிக்காயானது அதிகளவு நார்சத்தினையும், குறைந்தளவு எரிசக்தினையும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இதனை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் நீண்டநேரம் பசியையும் தாங்கும்.

மேலும் உணவானது நன்கு செரிப்பதுடன் உடலின் வளர்ச்சிதை மாற்றமும் சீராக நடைபெறுகிறது. எனவே பூசணிக்காயை உண்டு ஆரோக்கியமான உடல் எடையினை குறைக்கலாம்.

 

ஆரோக்கியமான தூக்கத்திற்கு

பூசணி விதையில் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இதனை உண்ணும்போது டிரிப்டோபன் உடலில் செரடோனின் உற்பத்தியினைத் தூண்டுகிறது. இந்த செரடோனின் உடல் மற்றும் மனதிற்கு ஆறுதல் அளித்து ஆரோக்கியமான தூக்கத்தினை உண்டாக்குகிறது. எனவே பூசணி விதையினை உண்டு ஆரோக்கியமான தூக்கத்தினைப் பெறலாம்.

 

சருமப்பாதுகாப்பு

பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் மற்றும் விட்டமின்கள் சருமத்தை புறஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டு மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டினால் ஏற்படும் சரும சுருக்கம், பரு, கொப்புளங்கள் ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

 

பூசணியைத் தேர்வு செய்யும் முறை

பூசணியை கையில் தூக்கும்போது கனமானதாகவும், தடித்த காம்பினை உடையதாகவும் இருக்குமாறு தேர்வு செய்யவும். மேல் தோல் சுருங்கிய வெட்டுக்காயங்கள் உடையதை தவிர்க்கவும்.

பூசணியை முழுவதுமாக காற்றோட்டமான அறையின் வெப்பநிலையில் பல வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். வெட்டிய பூசணித்துண்டுகளை ஓரிரு நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

பூசணியானது துண்டுகளாகவோ, சூப்பாகவோ, சாறாகவோ உண்ணப்படுகிறது. சாலட்டுகள், இனிப்புகள், ஊறுகாய்கள் தயாரிக்க பூசணி பயன்படுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here