நீட் தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்வதற்காக  தமிழக பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை  எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு கடந்த 15-ஆம் தேதி முதல்  இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட பலரது நுழைவுச் சீட்டில் உள்ள விவரங்கள் சரியாக இல்லையென்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. உதாரணத்துக்கு, கோயம்புத்தூரில் உள்ள தேர்வு மையம், சென்னையில் உள்ளதாக தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சரி செய்வதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது. அதன்படி,  விவரங்கள் சரியாக இல்லாத நுழைவுச் சீட்டின் நகலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும்.  மாணவர்களிடம் இருந்து பெறப்படும்  நுழைவுச்சீட்டு நகலை ஸ்கேன் செய்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அலுவலகத்துக்கு அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவுச்சீட்டு தேசிய தேர்வுகள் முகமைக்கு அனுப்பப்பட்டு தவறான விவரங்கள் சரிசெய்யப்படும். மாணவர்கள் நுழைவுச்சீட்டை அளித்த அடுத்த நாளிலிருந்து, தவறான விவரங்கள் சரி செய்யப்பட்டுள்ளதா என்பதை தேசிய தேர்வுகள் முகமையின் இணையதளத்தில் பார்த்து அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here