சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நேரத்தை ஆய்வு செய்த மாணவர்கள்.
நிழலில்லாத நாள் என்று அழைக்கப்படும் “ஜீரோ ஷடோ டே’ குறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தில் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்டனர்.
சூரியனை பூமி நாள்தோறும் சுற்றி வந்தாலும் அனைத்து நாள்களும் சூரியன் நமது தலைக்கு மேல் செங்குத்தாக வருவதில்லை. அவ்வாறு தலைக்கு மேல் சூரியன் செங்குத்தாக வரும் நிகழ்வுதான் நிழலில்லாத நாள் “ஜீரோ ஷடோ டே’  என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுக்கு இரண்டு நாள்கள் மட்டுமே சூரியன் இவ்வாறு செங்குத்தாக வருகிறது. இந்த ஆண்டு புதுச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நிழலில்லா நாள் வந்தது. இதைத் தொடர்ந்து, சென்னையில் புதன்கிழமை (ஏப்ரல் 24) நிழலில்லா நாள் வந்தது.
இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் (பொ) சௌந்திரராஜ பெருமாள் கூறியது:
சூரியனை பூமி சுற்றி வரும்போது, அதன் சுழல் அச்சு சற்று சாய்ந்து இருக்கும். இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 22-ஆம் தேதி சூரியன் மகர ரேகைக்கு நேராகவும்,  தொடர்ந்து,  மார்ச் 21-ஆம் தேதி சரியாக நிலநடுக்கோட்டுக்கு நேராகவும் காணப்படும். இதைத் தொடர்ந்து, மெல்ல நகர்ந்து ஏப். 24  (புதன்கிழமை) 13 டிகிரி நேராக சூரியன் வரும். அதுதான் சென்னைக்கான நிழலில்லாத நாளாக கணிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னையில் புதன்கிழமை நண்பகல் 12.07 மணிக்கும், அதன் நேர்கோட்டில் உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரில் நண்பகல் 12.17-க்கும், மங்களூரில் நண்பகல் 12.28-க்கும் என 10 நிமிட இடைவெளியில் நிழலில்லா நாள் நிகழ்ந்தது. அப்போது, சூரியன் செங்குத்தாக, அதாவது தலை உச்சிக்கு நேராக இருந்ததால், உடலின் நிழல் பக்கவாட்டில் விழாமல் பாதத்துக்கு அடியில் விழுந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையிலான இடைவெளி மூலம் பூமியின் சுற்றளவு, சுழல் வேகம், அச்ச ரேகை, தீர்க்க  ரேகை ஆகியவற்றை எளிதில் கணிக்க முடியும். அடுத்த நிழலில்லா நாள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிகழும் என்றார்.
ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்: நிழலில்லா நாளையொட்டி, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் மாணவர்கள் காலை முதலே குவியத் தொடங்கினர். நிழலில்லா நாள் குறித்து மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் செயல் விளக்கம் அளித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “பாடப் புத்தகத்தில் மட்டுமே நிழலில்லா நாள் குறித்து படித்துள்ளோம். தற்போது, நேரடியாக காண்பதன் மூலம் விண்வெளி குறித்து அறிந்து கொள்ள முடிந்தது’ என்றனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here