கோவைக்காயின் மருத்துவப்பண்புகள்

சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்த

கோவைக்காயானது உணவில் சேர்த்துக் கொள்ளப்படும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் குறைத்து சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இக்காயினை உண்டு இரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம்.

உடல் பருமனைத் தடுக்க

கோவைக்காயில் கொழுப்பு திசுக்கள் உண்டாவதற்கான எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த எதிர்ப்பு பொருளானது உடல் பருமன் அடைவதைத் தடுக்கிறது.

மேலும் இக்காயானது முறையான உடல்வளர்ச்சிதை மாற்றத்தினையும் ஏற்படுத்தி உடல் பருமனாகாமல் பாதுகாக்கிறது. எனவே இக்காயினை உண்டு உடல்பருமனைத் தடுக்கலாம்.

உடல் களைப்பினைப் போக்க

பொதுவாக இரும்புச்சத்து குறைபாட்டினால் உடல் களைப்பானது விரைவில் ஏற்படும். இரும்பு சத்து நிறைந்த உணவுப்பொருட்களை உண்பதால் உடல் களைப்பு நீங்கும். கோவைக்காயானது அதிகளவு இரும்புச்சத்தினைக் கொண்டுள்ளது. எனவே இதனை உண்டு உடல் களைப்பினைப் போக்கலாம்.

நரம்பு மண்டலப் பாதுகாப்பிற்கு

கோவைக்காயில் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து விட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உள்ளன. அல்சைமர் நோய், கைகால் வலிப்பு நோய், உணர்வின்மை, பதட்டம் உள்ளிட்ட நரம்பு சம்பந்தமான நோய்களை இக்காயினை உண்டு விரட்டலாம்.

சீரான உடல்வளர்சிதை மாற்றத்தினைப் பெற

விட்டமின் பி1 (தயாமின்)-னாது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செல்களில் கொழுப்பாக சேர விடாமல் ஆற்றலாக மாற்ற மிகவும் அவசியமானது. இதனால் சீரான உடல் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுகிறது.

கோவைக்காயில் விட்டமின் பி1 (தயாமின்) அதிகளவு உள்ளது. மேலும் இக்காயில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தினை அதிகரித்து உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் ஊட்டச்சத்தினையும், ஆக்ஸிஜனையும் வழங்கி சீரான உடல் வளர்ச்சிதை மாற்றம் நடைபெறக் காரணமாகிறது. எனவே இக்காயினை உண்டு சீரான உடல் வளர்ச்சிதை மாற்றத்தினைப் பெறலாம்.

நல்ல செரிமானத்திற்கு

இக்காயானது அதிகளவு நார்ச்சத்தினைக் கொண்டுள்ளது. நார்ச்சத்தானது உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை ஒன்று சேர்த்து எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

மேலும் இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், அல்சர், மூலம் உள்ளிட்ட செரிமானம் சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படுகின்றன. எனவே இக்காயினை உண்டு ஆரோக்கியமான செரிமானத்தைப் பெறலாம்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்க

ஆக்ஸலேட்டுகள் உள்ள உணவுப்பொருட்களே சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். மேலும் கால்சியம் கலந்த தண்ணீரைக் குடிப்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.

ஆனால் கால்சியம் உள்ள உணவுப்பொருட்களை உண்ணும்போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கோவைக்காயானது அதிகளவு கால்சியத்தைக் கொண்டுள்ளது. எனவே இக்காயினை உண்டு சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

மனஅழுத்தத்தைச் சரியாக்க

கோவைக்காயில் விட்டமின் பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்) ஆகியவை குறிப்பிட்டளவில் உள்ளன. இந்த விட்டமின்கள் மூளையில் மனஅமைதிக்கு தேவையான சில அவசியமான ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன. எனவே கோவைக்காயினை உணவில் சேர்த்து மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.

சருமப்பிரச்சினைகள் தீர

கோவைக்காயானது எதிர்ப்பு அழற்சி பண்பு, பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனால் கோவைக்காயின் இலைச்சாறானது தோலழற்சி, தோல்வெடிப்பு, தோல் எரிச்சல், படை, சொறி, தேமல் ஆகிய சருமநோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

எலும்புகள் வலுப்பெற

கோவைக்காயில் உள்ள கால்சியம், இரும்புச்சத்துக்கள் எலும்புகளை வலுப்பெறச் செய்கின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கோவைக்காயினை வாங்கும் முறை

கோவைக்காயினை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன், கனமான, புதிதாக உள்ளவற்றை வாங்க வேண்டும். மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள் கொண்டவை, சுருங்கியவை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கோவைக்காயானது ஊறுகாய், வற்றல், சாலட், சூப்புகள் உள்ளிடவை தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த இயற்கையின் அன்பளிப்பான கோவைக்காயினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here