மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்படுகிறது. மதியம் 12 மணிக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, மதுரை மாவட்டத்தில் 2,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் 1,549 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 853 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதவியின் அடிப்படையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 1, 2, 3, 4 ஆகியோர் இறுதி கட்டமாக கணினி மூலம் குலுக்களில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த பணி தேர்தல் பார்வையாளர்கள் வினோத்குமார் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் பணி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகள் தேர்தல் வாக்குப்பதிவு பயிற்சி பெற்ற மையத்தில் இன்று வழங்கப்படுகிறது. இதற்காக இன்று காலை 8 மணிக்கு பயிற்சி மையத்திற்கு அலுவலர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலூர் தொகுதிக்கு மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுரை கிழக்கு தொகுதிக்கு யாதவர் பெண்கள் கல்லூரியிலும், சோழவந்தான் தொகுதிக்கு வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், மதுரை வடக்கு தொகுதிக்கு ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வழங்கப்படுகிறது. மேலும், மதுரை தெற்கு தொகுதிக்கு தியாகராஜர் மாடல் மேல்நிலைப்பள்ளியிலும், மதுரை மத்திய தொகுதிக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை மேற்கு தொகுதிக்கு ஞானஒளிபுரம், ஹோலிபேமிலி பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மன்னர் கல்லூரியிலும், திருமங்கலம் தொகுதிக்கு பி.கே.என் பள்ளியிலும், உசிலம்பட்டி தொகுதிக்கு முத்துராமலிங்க தேவர் கல்லூரியிலும் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இதனைப் பெற்றவர்கள் மதியம் 12 மணிக்குள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்கு இயந்திரம் மற்றும் ஓட்டு பதிவுக்கான பொருட்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here