பிளஸ் 2, பத்தாம் வகுப்பு உள்ளிட்ட முக்கிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டப் புத்தகங்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல்கட்டமாக 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் நிகழ் கல்வியாண்டில் அறிமுகமானது. மீதமுள்ள வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டமாக மாற்றப்பட உள்ளன. இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சூழலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் அண்மையில் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய பாடத் திட்ட புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக www.tnscert.org இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளது. அதில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு போன்ற முக்கிய வகுப்புகளுக்கான அனைத்து பாடப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதர வகுப்புகளுக்கான பாடப் புத்தங்கள் படிப்படியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்களில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறப்பம்சங்கள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எஞ்சிய வகுப்புகளிலும் இருக்கும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த புரிதல் ஏற்படுவதற்காக முன்கூட்டியே புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
9-ஆம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை மாற்றப்பட்டுள்ளதால் புத்தகங்கள் ஒரே தொகுதியாக அச்சிடப்பட்டுள்ளன. இதுதவிர கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டம் அதிகமாகவும், கடினமாகவும் இருப்பதாக பரவலாக கருத்துகள் வந்தன. அதை ஏற்று கலை, தொழில் பிரிவுகளில் சில கூடுதல் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
2.30 கோடி இலவச பாடநூல்கள் தயார்: அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2.3 கோடி புத்தகங்கள் பாடநுல் கழகம் மூலம் அச்சிடும் பணிகள் முடிந்துவிட்டன. அவற்றை இப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து பள்ளிகளுக்கு பாடநூல்கள் பிரித்து அனுப்பப்படும். கோடை விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளிகள் திறக்கப்படும்போது எல்லா மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்படும் என்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here