ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிடக்கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்டது. அதில் எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தை பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து புதுக்கோட்டையை சேர்ந்த தேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதிப்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று, கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியில் பட்டத்தை பெற்றவர்களே ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத இயலும் என கூறப்பட்டுள்ளது. இதனால் எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்த பலர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத இயலாத நிலை உருவாகியுள்ளது.

எனவே பிப்ரவரி 28ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, எஸ்சி, எஸ்டி வகுப்பினர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியில் பட்டத்தை பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதலாம் என புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here