மதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் – ஒதுங்கும் பெண் ஊழியர்கள்  மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து வாக்கு இயந்திரங்களை ஒப்படைக்க மறுநாள் காலை வரையாகும் என்பதால் பணியிலிருந்து விடுவிக்கக் கோரி பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவு விருப்பமனு அளித்து ள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.18-ம் தேதி நடக்கிறது. இந்நாளில் மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத்திருவிழா நடக்கிறது. காலையில் மீனாட்சி கோயில் தேரோட்டமும், அன்று மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடக்கிறது. தொடர்ந்து மறு நாள் காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் முக்கியமான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அதனால், மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக தேர்தல் தேதியை மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மறுத்த தேர்தல் ஆணையம், தற்போது சித்திரைத் திருவிழா நடக்கும் மதுரையில் மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப் பதிவு நடத்துவதாக அறிவித்துள்ளது

வழக்கமாக வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். ஆனால், சித்திரைத் திருவிழாவுக்காக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தேர்தலின்போது வாக்குப்பதிவு முடிந்து, அந்த வாக்கு இயந்திரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கு இரவு 12 மணி வரையாகும். அதனாலே, பெண்கள் பொதுவாக வாக்குச்சாவடி தலைமை அதிகாரி பொறுப்புக்கு வர விரும்பாமல் அதற்கு கீழான வாக்குப்பதிவு அலுவலர் (பி-1, பி-2, பி-3) பணியைப் பெற்றுச் செல்வார்கள். ஆனால், வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் தேர்தல் பணிக்கு வர ஆர்வமில்லாமல் ஏராளமான பெண் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுக்குத் தேர்தல் பணியே வேண்டாம் என்று ஓட்டம் பிடிக்கின்றனர்.

அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவக் காரணங்களைச் சொல்லிக் கேட்டாலும் தேர்தல் பணிகளை யாருக்கும் ரத்து செய்ய வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலச்சங்கத் தலைவர் கே.கே.காளிதாஸ் கூறுகையில், வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க முந்தைய நாள் இரவு அங்கு தங்க வேண்டும். தற்போது 2 மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பெட்டிகளை ஒப்படைக்க மறுநாள் இரவும் தங்க வேண்டி உள்ளது. இரண்டு நாள் பெண் அதிகாரிகள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத வாக்குச்சாவடி மையங்களில் எப்படி தங்குவார்கள். கூடுதலாக 2 மணி நேரம் அதிகரித்தால் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிற மாதிரி கூடுதல் வாக்குப்பதிவு நடக்க வாய்ப்பு இல்லை’’ என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here