முட்டையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தியாவசியமான சத்துகள் இருந்தாலும், முட்டையையும் அளவாகச் சேர்த்துக்கொள்வதன் அவசியத்தையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு முடிவு.

`ஆம்லெட்', `ஆப்பாயில்'...  தினம் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்..!? - அமெரிக்க ஆய்வின் அலர்ட்

ட்டச்சத்து தேவையை உடனடியாக பூர்த்தி செய்யக்கூடியதில், மலிவான விலையில் கிடைக்கும் ஓர் உணவு, முட்டை. ஆம்லெட், ஆப்பாயில், ஃபுல் பாயில், கரண்டி ஆம்லெட், கலக்கி, அவித்த முட்டை, பொரியல், குழம்பு எனப் பலரின் அன்றாட மெனுவில், ஏதாவது ஒரு வகையில் இடம்பெறும் அளவுக்குத் தவிர்க்கமுடியாத ஓர் உணவாக இருக்கிறது முட்டை. அதேநேரத்தில் சர்ச்சைக்குப் பேர்போன ஓர் உணவு என்பதும் தவிர்க்கமுடியாது. சைவமா, அசைவமா… பிளாஸ்டிக் முட்டை… நாட்டுக்கோழி முட்டையில் கலப்படம்…  பிராய்லர் முட்டையில் சத்தில்லை… என முட்டை குறித்த சர்ச்சை நீள்கிறது. 

ஆம்லெட்

முட்டை பற்றிய இத்தனை களேபரத்துக்கு மத்தியில் தற்போது பரவும் ஒரு தகவல் முட்டை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த முறை எழுந்திருப்பது வெறும் சர்ச்சை அல்ல, ஓர் ஆய்வின் முடிவு. அமெரிக்காவில் உள்ள `நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம்’ (Northwestern University) 30,000 பேரிடம் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு அபாயகரமான அளவு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வின்படி, தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கிறது அந்த ஆய்வு முடிவு. அதாவது, தினமும் ஒரு முட்டைவீதம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவிகிதமும், பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவிகிதமும் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், தினமும் இரண்டு முட்டை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 34 சதவிகிதமும், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதமும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 

முட்டை

முட்டைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ஆய்வு முடிவுகள் குறித்து உணவியல் நிபுணர் மேனகாவிடம் கேட்டோம்.

“ஒரு முட்டையில் ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ,கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் பல்வேறு சத்துகள் இருக்கின்றன. எனவே, முட்டை ஓர் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த ஆய்வுகள் அனைத்தும் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்துச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியே கூறுகின்றன. அதற்காக மஞ்சள் கருவும் தூக்கி எறிய வேண்டியவை என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம். `லூடின்’ (Lutein), `சியாக்ஸாந்தின்’ (Xeaxanthin), `கோலின்’ (Choline) ஆகிய சத்துகள் முட்டையின் மஞ்சள் கருவில்தான் நிறைவாக இருக்கின்றன. குறிப்பாக, முட்டையின் மஞ்சள்கருவில் உள்ள செலினியம் புற்றுநோய் வராமல் தடுக்கும். `கோலின்’ ஊட்டச்சத்து, மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும்; ரத்த நாள நோய்களிலிருந்தும் பாதுகாக்கும். `லூடின்’ (Lutein) மற்றும் `சியாக்ஸாந்தின்’ என்னும் ஆன்டிஆக்ஸிடென்ட் கண் நோய் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். 

மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இப்படி முட்டையின் மஞ்சள் கருவில் பல்வேறு சத்துகள் இருக்கின்றன. ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள அதிகப்படியான கொழுப்புதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு அடிப்படையாகிறது. ஆனாலும் முட்டைக்கும்  மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்குமான தொடர்பு பற்றிய விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் முட்டை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பதை நிரூபிக்க இன்னும் வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

முட்டையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தியாவசியமான சத்துகள் இருந்தாலும், முட்டையையும் அளவாகச் சேர்த்துக்கொள்வதன் அவசியத்தையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு முடிவு. ஒரு மனிதனுக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது, `தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’. ஆனால் முட்டையின் மஞ்சள் கரு 186 மி.கிராம் கொழுப்பைக் கொண்டுள்ளது. இது வளரும் இளம்பருவத்தினரின் சராசரி கொழுப்புச் சத்து தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதனால், வளரும் குழந்தைகளுக்கு தினமும் சராசரியாக ஒரு முட்டை பரிந்துரை செய்யப்படுகிறது. 

மஞ்சள் கருவைத் தவிர்த்து முட்டையை உட்கொள்வது கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் இருக்க உதவும். எனவே, முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்வதில் வரம்பு இல்லை. ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பொதுவாக வாரத்துக்கு நான்கு முதல் ஐந்து முட்டை வரை சேர்த்துக்கொள்வதில் தவறில்லை. குறிப்பாக, 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் தினமும் ஒன்று என்றளவில்கூட எடுத்துக்கொள்ளலாம். அதுவே, ஆரோக்கியமான வயது வந்தோர் வாரத்துக்கு நான்கு முட்டையும் முதியவர்கள் மூன்று முதல் நான்கு முட்டைகள் வரையும் எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here