பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதப் பாடத்துக்கான வினாத் தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கணிதப் பாடத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முக்கிய பாடமான கணிதத்தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
கணித வினாத்தாள் குறித்து மாணவ, மாணவிகள் கூறியது: 
கணித வினாத்தாளைப் பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது. காலாண்டு,  அரையாண்டுத் தேர்வுகள் மட்டுமல்ல, கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் கூட கேட்கப்படாத வினாக்கள் இந்தத் தேர்வில் இடம்பெற்றிருந்தன.  ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வினாக்கள் மிகவும் கடினம். ஏனைய வினாக்கள் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. 2 மதிப்பெண், 5 மதிப்பெண், 10 மதிப்பெண் என அனைத்துப் பிரிவுகளிலும் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் முற்றிலும் புதிதாக இருந்தன. 
கணிதம்,  அறிவியல்,  சமூக அறிவியல் ஆகிய முக்கிய பாடங்களில் கணிதத்தில்தான் 100-க்கு 100 மதிப்பெண்கள் எளிதாக பெற முடியும்.  ஆனால் இந்த வினாத்தாளில் 75-க்கும் மேல் பெறுவதே சிரமம்தான் என்றனர்.

மனரீதியாக பாதிக்கும்… இது குறித்து அரசுப் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறியது:  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணித வினாத்தாள் மாணவர்களை மட்டுமல்ல, ஆசிரியர்களையும் கலக்கமடைய செய்துவிட்டது.
முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது. பொதுவாக 50 சதவீதம் எளிமையாகவும், 30 சதவீதம் சராசரியாகவும், 20 சதவீதம் கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால் வினா தயாரித்தவர்கள் தங்களது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி பெற 5 மதிப்பெண்கள் பகுதியில் உள்ள கேள்விகள் பெரிதும் உதவும். ஆனால் அந்தப் பகுதியில் உள்ள 9 வினாக்களில் ஒரே ஒரு வினாவுக்கு மட்டுமே சராசரி மாணவர்களால் பதிலளிக்க முடியும்.  மற்ற வினாக்களை கடினம்,  மிகக் கடினம் என வகைப்படுத்தலாம். 
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும். இதன் மூலம் கணிதத் தேர்வில் சென்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவதோடு,  அந்தப் பாடத்தின் தேர்ச்சி சதவீதமும் பாதிக்கும்.
நீட் தேர்வை கருத்தில் கொண்டு…: நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை கருத்தில் கொண்டே இதுபோன்ற வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. 
மற்ற பாடங்களில் 90, 95 மதிப்பெண் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும்போது, கடினமாக உழைத்த  கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை எங்களுக்குதான் தெரியும். 
ஒவ்வொரு பள்ளியிலும் சனி, ஞாயிறு, காலை, மாலை வகுப்புகள் அதிகம் எடுக்கும் கணித ஆசிரியர்கள் வேதனைப்படுகிறோம்.  கடினமான வினாகளைக் காட்டிலும்,  சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய வினாக்களே மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்பதை தேர்வுத்துறை புரிந்து கொள்ள வேண்டும் என்றனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here