ஊனமுற்றோர் பட்டியலில் நீரிழிவு நோயாளிகள்?
ஊனமுற்றோர் பட்டியலில் நீரிழிவு நோயாளிகள்?
நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், இவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கத் திட்டம் ஏதும் உள்ளதா என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அதில், ’இந்தியாவில் ஒரு லட்சம் சிறுவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சிறுவர்கள் சரியான நேரத்தில் உணவு விகிதத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்சுலின் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில், இம்மாணவர்கள் சர்க்கரை நோய் பரிசோதனைக் கருவி, மாத்திரைகள், சாக்லேட், பழங்கள் போன்றவற்றை தேர்வு அறைகளுக்குள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ நிபுணர்கள் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை மீண்டும் இன்று (மார்ச் 21) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு வந்தது. அப்போது மருத்துவர் நிபுணர்கள் நேரில் ஆஜராகி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சில அத்தியாவசியத் தேவைகள் உள்ளன. அவை தாமதமானால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் எத்தனை நீரிழிவு நோயாளிகள் உள்ளனர், இவர்களுக்கான போதிய மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளனவா, தேர்வுகளின்போது சர்க்கரை நோயாளிகள் குளுக்கோமீட்டர் பொருத்திச் செல்ல அனுமதிக்கலாமா, இனிவரும் காலங்களில் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு அறைகளுக்குள் நீரிழிவு நோயாளிகள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கலாமா, இவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கத் திட்டம் ஏதும் உள்ளதா எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள்.
இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here