பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்கள் யோசிக்கும் வேளையில், பிள்ளைகளை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்ற தேடுதலை பெற்றோர்களும் ஆரம்பித்திருப்பார்கள். இவர்களுக்கு உதவும் வகையில், என்னென்ன கல்லூரிப் படிப்புகள் உள்ளன என்பது குறித்த கட்டுரை

இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். ஏப்ரல் மாதம் 19-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  தற்போதே பல கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆகையால், கவனத்துடன் கல்லூரிகளில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்திசெய்து வழங்குவது அவசியம்.

அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எவ்வளவு செலவாகும்… போன்ற கேள்விகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே இருக்கும். ஒரு மாணவனுக்கு ப்ளஸ் டூ மதிப்பெண் தேர்வு முடிவுகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது ப்ளஸ் டூ வகுப்புக்குப் பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதுகுறித்து எடுக்கும் முடிவு. இந்த முடிவை, தெளிவாக எடுக்க வேண்டும்.

பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களின் கட்டாயம், நண்பர்களின் உந்துதல், தெரிந்தவர்கள் பணியாற்றும் துறை, தனியார் கல்லூரிகளில் கவர்ச்சிகரமான விளம்பரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே படிப்பையும் கல்லூரியையும் தேர்வுசெய்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்’’ என்ற அவர், மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பட்டியலிட்டார்.

ராஜராஜன் கல்வியாளர் +2-க்கு பிறகு படிப்புகள்

“12-ம் வகுப்பில் பொதுவாக நான்கு பிரிவுகளில் மாணவர்கள் படித்திருப்பார்கள்.

1. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் அல்லது உயிரியல் பிரிவு.

2. கணிதப் பாடத்துக்குப் பதிலாக, தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவு.

3. கணக்குப்பதிவியல், பொருளாதாரம், வணிகவியல், வரலாற்றுப் பாடங்களைக்கொண்ட பிரிவு.

4. தொழிற்படிப்புப் (ஒகேஷனல் கோர்ஸ்) பிரிவு.

முதல் பிரிவையும் நான்காவது பிரிவையும் தேர்ந்தெடுத்தவர்கள், பொறியியல் படிப்பிலும் இளநிலை பட்டப்படிப்பிலும் சேரலாம். பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள், கலந்தாய்வு வழியே கல்லூரியில் சேர்வது அவசியம். கடந்த ஆண்டு, ஐந்து பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே முழுமையான இடங்கள் நிரம்பின. மற்ற கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் காலியாகவே இருந்தன. இதனால், மாணவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருந்தாலே முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை அறியாமல் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற முயல்வது, பொருளாதார இழப்பையே ஏற்படுத்தும்.

பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, ECE, EEE, Mechanical Engineering, Civil Engineering என்று core engineering பாடத்தையோ அல்லது வர்த்தக வாய்ப்புள்ள பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, புட் புராஸசிங் போன்ற பிரிவுகளையோ தேர்ந்தெடுக்கலாம். கட்டடக்கலை படிக்க விரும்புகிறவர்கள், NATA தேர்வு வழியாக பி.ஆர்க் சேரலாம்.

பொதுவாக அறிவியல் பிரிவு எடுப்பவர்களுக்கு வாய்ப்பு குறைவு எனச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், அவர்களுக்குத்தான் வாய்ப்புகளும் படிப்புகளும் ஏராளம் உள்ளன. நீட் தேர்வு எழுதாமலேயே மருத்துவத் துறையில் அதிகமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவை அனைத்திலும், அறிவியல் பிரிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில், சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேரலாம்.

கல்லூரி படிப்புகள் கல்லூரி விண்ணப்பங்கள்

இளநிலை பட்டப்படிப்புகளாக பிசியோதெரப்பி, ஆக்குபேஷனல் தெரப்பி, பார்மசி, நர்ஸிங் உள்ளிட்ட படிப்புகளையும், வேளாண் துறை சார்ந்த படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். இதில், அக்ரிகல்ச்சர், ஹர்டிகல்ச்சர், வேளாண் சார் புள்ளியியல் படிப்புகள் உள்ளன. மீன்வளம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளான இயற்பியல், வேதியியல், புள்ளியியல், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண்ணுயிரியியல் போன்ற படிப்புகளுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

போட்டித் தேர்வுகளை விரும்புகிறவர்கள் கலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துச் சேரலாம். நடனம், இசைத் துறையில் ஆர்வம் இருந்தால் சென்னையில் உள்ள தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்திலும், நடிப்பிலும் கலையிலும் ஆர்வமும் திறமையும் இருந்தால் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியிலும் சேர்ந்து படிக்கலாம். கணினி வழியாக ஒலிப்பதிவு, அனிமேஷன், எடிட்டிங் போன்றவற்றில் ஆர்வமிருந்தால் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். சிற்பக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். உடற்கல்வி, யோகா, விளையாட்டு உள்ளிட்ட படிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் சேரலாம்.

கடல்சார் படிப்புகளில் ஆர்வமிருந்தால், சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு எழுதி, அதில் சேரலாம். பொருளாதாரம் சார்ந்த படிப்புகளை, `சென்னை ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்’ கல்வி நிறுவனத்தில் சேரலாம். இங்கு சேர, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். தற்போது இதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

கல்லூரி படிப்புகள்

இளநிலை கலைப் படிப்புகளாக, பொருளாதாரம், வணிகம், வணிகவியல் போன்ற படிப்புகளை அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். தற்போது ஏராளமான அரசு உறுப்புக் கல்லூரிகள் திறந்திருப்பதால் அதில் சேர்ந்து படிக்கலாம். கட்டணமும் குறைவு. அரசுப் பணித் தேர்வுகள் எழுத ஆர்வமுள்ளவர்கள், இளநிலைப் பட்டப்படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.

கணக்குப்பதிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்கள் CPT Foundation (common proficiency test) தேர்வு எழுதலாம். இதில் தேர்ச்சிபெற்று கணக்குத் தணிக்கையாளர் (chartered accountants) நேரடியாகப் பயிற்சி பெறலாம். பி.காம், பி.ஏ படிக்க விரும்பினால் ICWAI (institute of cost and works accountants of india) மற்றும் ICSI (The Institute of Company Secretaries) நிறுவனங்களில் பயிற்சிபெற்று பட்டப்படிப்பை கூடுதல் மதிப்புமிக்கதாக மாற்றலாம்.

கல்லூரி படிப்புகள்

சட்டப்படிப்பு படிக்க விரும்புகிறவர்கள், ப்ளஸ் டூ படிப்புக்குப் பிறகு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.

நடுவண் அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறவர்கள் பொது நுழைவுத்தேர்வுக்கு 13.04.2019  வரை ஆன்லைன் வழியே https://www.cucetexam.in/  விண்ணப்பிக்கலாம். இங்கு, ப்ளஸ் டூ மாணவர்கள் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் படிப்புகளாக எம்.எஸ்ஸி வேதியியல் (Chemistry), பொருளியல் (Economics), உயிரி அறிவியல் (Life Sciences), கணிதம் (Maths), இயற்பியல் (Physics) படிப்புகள் உள்ளன. இங்கு பி.எட் படிப்புடன்கூடிய பி.எஸ்ஸி கணிதம் படிப்பும், இளநிலை பிரிவில் சிறப்புப் பாடங்களாக இசை, டெக்ஸ்டைல் போன்ற பாடங்களும் இருக்கின்றன.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் உணவு மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்துப் படிக்க விரும்புகிறவர்கள், இதற்கான National Council for Hotel Management and Catering Technology பொதுத்தேர்வுக்கு 03.05.2019 அன்று விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன! சரியான படிப்பையும் வழிகாட்டுதலையும் பெறவேண்டியது மட்டுமே அவசியம்.” என்றார்.

நன்றி

விகடன்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here