புதுக்கோட்டை,மார்ச்:18:முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.சினேகாமற்றும்  தேசிய பள்ளிக் குழுமத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில்  வெள்ளிப்பதக்கம் பெற்ற சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி மாணவி ஆர்.பிரியா ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து  பாராட்டினார்.

வேலூரில் பிப்ரவரி 17 முதல் 19 வரை மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சி.சினேகா கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார்.இவருக்கு தமிழக அரசின் சார்பில் தங்கப்பதக்கம் மற்றும் ரூ1 இலட்சத்துக்கான காசோலை வழங்கி பாராட்டியது.

மாணவி சி.சினேகா தொடர்ந்து மூன்று முறை அசாமில் நடைபெற்ற தேசிய பள்ளிக் குழும போட்டியிலும்,நாக்பூரில் நடைபெற்ற சப் ஜீனியர் தேசிய போட்டியிலும்,புனேயில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.இவர் மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து 8 முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற 2018- 2019 ஆம் ஆண்டிற்கான  தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில்  81 கிலோ எடைப்பிரிவில் புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஒரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி ஆர்.பிரியா பங்கு கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.இவருக்கு அரசு ரூபாய்1.50 இலட்சம் வழங்க இருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அரசுப் பள்ளி மாணவி சி. சினேகாவையும் ,தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவி ஆர்.பிரியாவையும்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பாராட்டினார்.

நிகழ்வின் போது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ்,முதலமைச்சரிடம் விருதுபெற்ற பளுதூக்கும் பயிற்சியாளர் க.முத்துராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here