உடுமலை:பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளை விரைந்து முடிக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை அனைத்து ஆசிரியர்களையும் பணியில் ஈடுபடுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மாநிலம் முழுவதும், பிளஸ் 1, 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாத இறுதி வரை நடக்கிறது.
தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிவடையும் நாட்களின் அடிப்படையில், முடிவுகள் வெளியிடப்படும் தேதி நிர்ணயிக்கப்படும். நடப்பாண்டில், இந்த தேதி முன்னதாக அறிவிக்கப்பட்டதால், இந்த தேதிக்குள், விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், லோக்சபா தேர்தல், ஏப்., 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்புகள் மற்றும் தேர்தல் பணிகளும் வழங்கப்படுகிறது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணிகளை துரிதப்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வழக்கமாக, தனியார் பள்ளிகளில், விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே செல்கின்றனர். நடப்பாண்டில், அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அந்தந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி, அனைத்து ஆசிரியர்களும், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், காலையில், திருத்தப்படும் விடைத்தாள்கள், உடனுக்குடன், மதியமே கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கல்வித்துறைக்கு ‘அப்டேட்’, செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here