அரசு பள்ளி மாணவி ஆசிய அளவிலான இளைஞர் தடகளப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை!


ஹாங்காங்: ஆசிய அளவிலான இளைஞர் தடகளப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதலில்  சென்னை வீராங்கனை தபிதா 2 தங்கப் பதக்கங்களை  வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹாங்காங்கில்  3வது ஆசிய இளைஞர் தடகள விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. சென்னையை சேர்ந்த தபிதா நேற்று முன்தினம் நடைபெற்ற  100 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்றார். பந்தய தூரத்தை 13.86  வினாடிகளில் கடந்த அவர் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு  தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். ஜப்பானை சேர்ந்த  மயூகோ 2வது இடத்தையும், சீனாவை சேர்ந்த  சின்யூ 3வது இடத்தையும் பிடித்தனர். நேற்று நடைபெற்ற நீளம் தாண்டும் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தபிதா 5.86 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். சீனாவின் ஹுவா ஷிஹு (5.76 மீ.) வெள்ளியும்,  இந்திய வீராங்கனை அம்பிகா நர்ஸாரி (5.73 மீ.) வெண்கலமும் வென்றனர்.

இரண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ள தபிதா,   செயின்ட் ஜோசப் விளையாட்டு அகடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.  இவர்  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் +1 படிக்கிறார். தந்தை  மகேஷ்வரன் ஆட்டோ டிரைவர். தினமும் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் அம்மா மேரி கோகிலா இல்லத்தரசி. இவருடன் பிறந்தவர்கள் 2 அக்கா, ஒரு தம்பி. இந்த வெற்றி குறித்து தபிதாவின் பயிற்சியாளர் நாகராஜன் கூறுகையில், ‘தபிதா ஆறாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பயிற்சி முகாமில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளாக ஆர்வமாகவும், தீவிரமாகவும் பயிற்சி பெற்று வருகிறார். இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி உள்ளார்’ என்றார். மொத்தம் 12 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here