கோடை பிறந்து விட்டாலே கொளுத்தும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக் காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். பலர் பூங்கா, கடற்கரை என நிழல் தரும் இடங்களுக்கு சென்று  வெயிலின் வேகத்தை தணித்துக் கொள்கின்றனர். 

வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்த பின் உடலைத் துடைத்து விட்டு, வியர்க்குரு பவுடர் காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். வியர்குருவில் பூஞ்சை அல்லது காளான் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் காளான் படை நீங்கி விடும்.

வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது நிறைய வியர்க்கும், தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.

கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டு விடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகையால் கோடை காலத்தில் சமைத்த  உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்தி விட வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்துக் குடிக்க வேண்டும். வயிற்றுப் போக்கின் ஆரம்பநிலையிலேயே   ‘எலெக்ட்ரால்’ போன்ற பவுடர்களைத் தண்ணீரில் கரைத்துச் சாப்பிட வேண்டும்.

கோடை வெயிலைச் சமாளிக்கவும், வெப்ப நோய்கள் வராமல் தடுக்கவும், அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். சாதாரணமாக தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். கோடையில் குறைந்தது 3லிருந்து 4 லிட்டர் வரை குடிக்க வேண்டும் காய்ச்சி ஆற வைத்து தண்ணீரை ஒரு மண்பானையில் ஊற்றி வைத்து  குடிக்கலாம். காபி மற்றும் தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென் பானங்களைக் குடிப்பதை விட இளநீர், நீர்மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்சி ஆகிய இயற்கை பானங்கள் குடிப்பதை அதிகப்படுத்துங்கள். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது. தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி,  ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறு களையோ அடிக்கடி சாப்பிடுவது நன்மை தரும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here