அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் வெளி முகமை (அவுட்சோர்சிங்) மூலமே நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென ஆசிரியர் சங்கங்ம் வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்ட அறிக்கை:
 தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 40,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. அங்கு துப்பரவுப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.5,000 என்ற அளவில் ஊதியம் தரப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அண்மையில் வெளியிட்ட அரசாணையில், இனி வரும் காலங்களில் 2012-ம் ஆண்டு, மார்ச் 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆணையின்படி உருவாக்கப்பட்ட, அனைத்து துப்புரவாளர் பணியிடங்களும் நிரப்பப்படாது. மேலும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்ட 2,213 துப்புரவுப் பணியாளர்களின் ஓய்வுக்குப் பிறகு, அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாது.
 இனிமேல் துப்புரவுப் பணியிடங்கள் வெளிமுகமை (அவுட்சோர்சிங்) மூலமாக மட்டுமே நிரப்பப்படும். இதற்கான ஆணைகள் தனியாக பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 துப்புரவு பணியாளர் குறித்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையின் மூலம், அடித்தட்டு பணியாளர்களிடம் இருந்து பாதிப்பு தொடங்கியுள்ளது. இவை மற்ற துறைகளுக்கும் தொடரும். இதன்மூலம், அனைத்து தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். அரசுப் பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே, தமிழக அரசு உடனே இந்த அரசாணையை ரத்து செய்து அனைத்துத் துறை சார்ந்த பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப முன்வர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதே கோரிக்கையை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here