ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, இன்று முதல் (15.03.2019) ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம். ஆசிரியர் தகுதித்தேர்வில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.04.2019.

ஆசிரியர் தகுதித் தேர்வு
கட்டாய கல்விச் சட்டத்தின்கீழ், இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றிருப்பது அவசியம் என்பதால், ஆசிரியர் தகுதித்தேர்வு முக்கியத்துவம் மிகுந்த தேர்வாகக் கருதப்படுகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு, இரண்டு தாள்களைக்கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், இரண்டாவது தாளில் தேர்ச்சி பெற்றால் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் ஆசிரியர்கள் நியமிக்கத் தகுதிபெறுவர்.

பன்னிரண்டாம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்று, இரண்டாம் ஆண்டு டிப்ளோமா ஆரம்பக்கல்வி பட்டயப்படிப்பில் தேர்ச்சிபெற்றவர்கள்/தேர்வு எழுத உள்ளவர்கள் அல்லது பி.எட் படிப்பில் தேர்ச்சிபெற்றவர்கள்/தேர்வு எழுத உள்ளவர்கள், சிறப்புக் கல்வியியல் பட்டயப்படிப்பு படித்தவர்கள்/ பட்டப்படிப்புக்குப் பிறகு பட்டயப்படிப்பு படித்தவர்கள், பி.எட் படித்தவர்கள் முதல் தாள் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பு முடித்தவர்கள், இரண்டு ஆண்டு டிப்ளோமா ஆரம்பக்கல்வியியல் (D.E.Ed) முடித்தவர்கள், பட்டப்படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பி.எட் முடித்தவர்கள், மேல்நிலைப் பள்ளி வகுப்பு முடித்து நான்கு ஆண்டு இளநிலை ஆரம்பக்கல்வியியல் முடித்தவர்கள் (B.E.Ed), ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எஸ்ஸி எஜூகேஷன் படிப்பை முடித்தவர்கள் இரண்டாவது தாள் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

பி.எட். முடித்தவர்கள், டி.எட் அல்லது பி.எட் ஸ்பெஷல் எஜூகேஷன் முடித்தவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக இருந்தால் ஆறு மாதகால ஆரம்பக் கல்வி குறித்த பிரிட்ஜ் (Bridge) கோர்ஸ் படித்திருக்க வேண்டும். ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுக்குள் இந்தப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளில் குழந்தைகள் மேம்பாடு மற்றும் அணுகுமுறை, மொழித்தாள் தமிழ், இரண்டாவது மொழித்தாள் ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி போன்ற பிரிவுகளிலிருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் குழந்தைகள் மேம்பாடு மற்றும் அணுகுமுறை, மொழித்தாள் தமிழ், இரண்டாவது மொழித்தாள் ஆங்கிலம் பாடங்களில் தலா 30 மதிப்பெண்ணும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 60 கேள்விகள் அல்லது சமூக அறிவியல் பாடங்களில் 60 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 150.
தேர்வு எழுதுபவர்கள் 60 சதவிகிதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருந்தால், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியலினத்தவர்களுக்கு 5 சதவிகித மதிப்பெண் விலக்கு வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில், ஆன்லைன் வழியே தேர்வு நடத்திட முடிவுசெய்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். குறிப்பாக, தனியார் நிறுவனங்களுக்கு தேர்வு குறித்த பணி வழங்கும்போது பல்வேறு வகையில் முறைகேடுகள் நடப்பதால், அரசு நிறுவனமான தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை நிறுவனமான NSEIT-க்கு ஆன்லைன் தேர்வு நடத்த வாய்ப்பு வழங்கியுள்ளது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை.

NSEIT நிறுவனம், ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெறுவது, நுழைவுச்சீட்டு வழங்குவது, ஆன்லைன் வழியே தேர்வு நடத்துவது, முடிவு வெளியிடுவது என அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும். முதல்கட்டமாக, 814 கணினி ஆசிரியர் பணிகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வு நடத்தவுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏழு லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடுதலான வசதிகள் செய்யவேண்டியுள்ளதால், அடுத்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஆன்லைன் வழியே நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here