ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தும் அரசின் முடிவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தாள் ஒன்று, இரண்டுக்கான தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தகுதி தேர்வை இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

புதிய நடைமுறையில் நகர்ப்புற மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் சம அளவில் இடம் வழங்கப்பட்டுள்ளதா என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆன்லைன் தேர்வு மையங்கள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது பற்றி செய்தியாளரிடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், தேர்வர்கள் தேர்வு எழுதக்கூடிய மையங்களை மிகவும் தொலைதூரமாக அமைப்பதாகவும் சென்னை என்றால் சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் தேர்வு மையங்களை தேர்வர்களுக்கு அமைத்து கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். அரசு நடத்தம் தேர்வை அரசை நம்பாமல் ஏன் தனியார் கல்லூரிகளுக்கு போய் தேர்வு மையங்களை அமைக்கிறார்கள் என பார்க்கும் போது அங்கும் பெரிய முறைகேடு நடைபெற்று வருகிறது. சென்னை என எடுத்து கொண்டால் ஏன் சென்னை நகரில் உள்ள கல்லூரிகளை அணுகாமல் புறநகர் பகுதி கல்லூரிகளை அணுகி தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என வினவினார்.

ஆன்லைன் போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது நிரூபணமாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத வரை போட்டித் தேர்வுகள் நடத்துவதில் பயன் இருக்காது என்பது கல்வியாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here