தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் குறித்து, சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனிடையே  ஆசிரியர்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் பேசக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வித்துறைக்கு உட்பட்ட அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி  தலைவர்களின் படங்களை அப்புறப்படுத்திட வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறை மற்றும் சுற்றுச்சுவர்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், அரசின் நலத்திட்டங்கள் சார்ந்த விளம்பரங்கள், தலைவர்களின்  பெயர்களுடன் உள்ள கல்வெட்டுகள், சின்னங்கள் ஆகியவற்றை துணிகளை ெகாண்டோ அல்லது வேறு வகையிலோ மறைக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த பதிவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் சார்ந்த இணைய தளத்தின் முகப்பு மற்றும்  வடிவமைப்பில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருப்பின், நீக்க வேண்டும். இறைவணக்க கூட்டத்தில் வாக்களித்தலின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தச் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையங்களாக செயல்படக்கூடிய பள்ளிகள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் குடிநீர், மின் இணைப்பு மற்றும் கழிப்பிட வசதி பயன்படுத்தும் வகையில் இருக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றம் மற்றும் நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி  மையத்தினை எந்த நேரத்திலும் பல்வேறு துறை அலுவலர்கள் வந்து பார்வையிடுவார்கள். எனவே, அக்கட்டிடங்களின் சாவியை, உடனடியாக அலுவலர்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் தாங்கள் பார்வையிடும் பள்ளிகளில், இந்த விதிமுறைகள் அனைத்தும்  கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here