பிளஸ் 1 கணித பாடத்தேர்வு மிக கடினமாக இருந்ததால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறையக்கூடும் என என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது. மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகள் முடிந்தநிலையில் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இப்போது தொடங்கியுள்ளன.

கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் பயிற்சிகள் மற்றும் நர்ஸிங் பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 2,914 மையங்களில் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் கணித பாடத்தேர்வு மிக கடினமாக இருந்ததால்மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கணித ஆசிரியர் சி.தமிழ்குமரன் கூறியதாவது: வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாணியில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கிரியேட்டிவ் வகையில் கேட்கப்பட்டிருந்தன. 1, 2, 3 மதிப்பெண்பகுதிகளில் அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்தன.

மாணவர் நுண்ணறிவை சோதிக்கும்படியாக இருந்த கேள்விகளை புரிந்துகொண்டு, பதில் அளிக்க மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

மேலும், 2, 3 மதிப்பெண் பகுதியில் எதிர்பார்ப்புக்கு மாறாக ‘டெபனிஷன்’ வகையிலான விளக்கம் தரும் கேள்விகள் இடம்பெற்றன. 5 மதிப்பெண் பகுதியில் சில கேள்விகளைத் தவிர்த்து மற்றவை கடினம்தான். இதனால் கிராமப்புற மற்றும் சராசரியாகப் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும். மேலும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கையும் சரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாணவர் சந்திரன் கூறும்போது, ‘‘ஏற்கெனவே பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் கடினமாகவும், கூடுதலாகவும் உள்ளது. கணிதப் பாடத்தில்மொத்தமுள்ள 12 பாடப்பகுதிகளையும் படித்து தேர்வுக்கு தயாராக போதுமான அவகாசம்இல்லை.

ப்ளூபிரின்ட் விவரமும் தரப்படவில்லை. எனினும், பொதுத்தேர்வு வினாத்தாள் ஓரளவேனும் எளிதாக இருக்கும் என எதிர்பார்த்தோம். அதற்கு மாறாக கணிதத் தேர்வு மிக கடினமாக இருந்தது.

பெரும்பாலும் படிக்காமல் தவிர்க்கும் பகுதிகளில்தான் அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவையும் குழப்பமாக இருந்தன. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் வடிவமைப்புக்கு மாறாக, பொதுத்தேர்வு வினாத்தாள் அமைந்திருந்தது. எனவே, வினாத்தாள் திருத்தலில் ஆசிரியர்கள் தாராளம் காட்ட வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வுத்துறை வடிவமைப்பதில்லை. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்தான் தயாரிக்கின்றனர். எனினும், அரசு வெளியிட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையில்தான் பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டது. மாணவர்கள் நலன்கருதி பாடத்திட்டம், தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

எனவே, அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றனர்.

இதற்கிடையே விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட இதர தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 14-ம்தேதி (நாளை) இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தமாக பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 22-ல் முடியவுள்ள சூழலில், முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here