தேர்வு நெருங்க, நெருங்க மாணவர்களுக்கு பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். இந்த பயத்தைப் போக்கி தேர்வில் எளிமையாக வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

திட்டமிடல் :

தேர்வு தேதிகள் தெரிந்தவுடன் மாணவ, மாணவியர்கள் ஒரு அட்டவணையை போட்டு எந்தெந்தப் பாடத்திற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று பிரித்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு எத்தனை பாடங்கள் இருக்கின்றனவோ அந்த பாடங்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு அதற்கேற்றார்போல் காலத்தை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

இந்த நாளில் இந்த பாடத்தை படிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை உடனே படித்துவிடுங்கள். நாளை படிக்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். படிப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து படியுங்கள். உங்களது கவனத்தை சிதறச் செய்யும் இடங்களில் படிப்பதை தவிர்த்து விடுங்கள்.

எந்த பாடத்தை படித்தாலும் அதில் முக்கியமான கருத்துக்களை குறித்துக்கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும். பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதை தவிர்த்து விடுங்கள். இடைவெளி விட்டு படியுங்கள். அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது மிகவும் நல்லது.

தேர்வு சமயத்தில்…. கவனிக்க வேண்டியவை :

பொதுவாக மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கு படிக்கும்போது செய்யக்கூடிய தவறு என்னவென்றால் இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பது. ஏனெனில், இரவில் கண் விழித்து படிப்பதன் மூலம் உடல்சோர்வு ஏற்படும். அதுமட்டுமின்றி இரவு உண்ணும் உணவு செரிமானம் அடையாமல் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மறுநாள் காலையில் தேர்வை சரியாக எழுத முடியாமல் போகும் நிலை ஏற்படும்.

எனவே, தேர்வு சமயத்தில் போதிய அளவு தூக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், தேர்வு சமயத்தில் உண்ணக்கூடிய உணவு வகையிலும் கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை, எண்ணெய் பதார்த்தங்களை, மசாலா வகை உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

தன்னம்பிக்கை வேண்டும் :

தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்கள்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏனெனில் நேர்மறை எண்ணங்கள் உங்களின் வெற்றிக்கு வழிகாட்டியாக அமையும்.

உங்கள் மீது நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். கேள்விக்கான விடைகளை தெளிவாகவும், அழகாகவும் எழுதுவது அவசியம். தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராகுவதை பாதிக்கும். மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றிடுங்கள்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here