சென்னை: பிளஸ்டூ மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த 1 ஆம் தேதி தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்த தேர்வினை சுமார் 8,87,992 பேர் எழுதி வருகின்றனர்.
மாணவர்களின் விடைத்தாள்கள் அந்தெந்த தேர்வு மையங்களில் இருந்து  சேகரிக்கப்பட்டு மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மண்டல அளவில் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு அரசுத் தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மண்டல அளவில் முகாம் அலுவலர்கள் வரும் 15-ம் தேதி பணியை ஏற்க வேண்டும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்தின் அதிகாரிகள் மார்ச் 26 ஆம் தேதி பணியை ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்களான விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்கள் மார்ச். 29 ஆம் தேதியிலிருந்து மேற்கொள்ள உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உதவி விடைத்தாள் திருத்துபவர்கள் (முதுகலை ஆசிரியர்கள்) மார்ச். 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், பிறப்பாடங்களுக்கான விடைத்தாள்களை, வரும் 29 ஆம் தேதி முதல் முதன்மை விடைத்தாள் திருத்துபவர்களும் வரும் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரையில் உதவி விடைத்தாள் திருத்துபவர்களும் திருத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்டூ மாணவர்களுக்கு ஏப்ரல் 19-ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதால், விடத்தாள்கள் திருத்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முகாம் அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here