இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுத உள்ளனர்.
இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, 
பத்தாம் வகுப்பு பொது தேர்வு 14ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொழிப்பாடத் தேர்வான தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய 4 தேர்வுகள் மதியம் 2 மணிக்கு துவங்கி 4.45 மணி வரையில் நடைபெறும். 

கணக்கு அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்பம் மொழிப்பாடம் ஆகிய தேர்வுகள் காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 12. 45 மணி வரையில் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12, 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59, 618 மாணவர்கள் மற்றும் 38,176 தனித்தேர்வர்களும் 3,731 மையங்களில் எழுத உள்ளனர்.

பள்ளி மாணவர்களில் 4 லட்சத்து 76, 318 மாணவிகளும், 4 லட்சத்து 83, 300 மாணவர்களும் தேர்வினை எழுதுகின்றனர். மேலும் 4 திருநங்கைகளும் தேர்வு எழுத உள்ளனர்.

புதுச்சேரியில் 302 பள்ளிகளில் பயின்ற 16, 597 மாணவர்கள் 48 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கூடுதலாக 133 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள 4 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.
மேலும் தமிழ் வழியில் பயின்று பள்ளிகளில் இருந்து தேர்வு எழுத உள்ள 5 லட்சத்து 22, 409 மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு பணியில் 49,000 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தேர்வினை எழுத உள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துள்ளனர். தேர்வு  கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான விதிமுறைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடிநீர், இருக்கை வசதி ,மின்சாரம் ,காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு கண்காணிப்பு பணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் காவல்துறை வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த இயக்குனர் இணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் மாவட்டங்களுக்கு சென்று தேர்வு பணி மேற்பார்வையிட அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்வு மையங்களில் நடைபெறும் ஒழுங்கீன செயல்களை தடுக்கும் வகையில் 5,500 பறக்கும்படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அரசுத் தேர்வுத்துறையில் தேர்வு கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here