சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாகவே பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டு வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், தேர்தல் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதால், தேர்தலுக்கு முன்பாகவே 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் இறுதித் தேர்வை நடத்திட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here