தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள், நேற்று அமலுக்கு வந்தன.

நடத்தை விதிகள் விபரம்:
* அரசியல் கட்சிகள், மற்ற கட்சிகளை குறை கூறும்போது, அது, அக்கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள், முந்தைய சாதனைகள் மற்றும் பணிகள் குறித்ததாக மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை, தவிர்க்க வேண்டும்
* மற்ற கட்சிகள் மற்றும் தொண்டர்கள் மீதான, சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளையும், திரித்து கூறப்படும் செய்திகளையும், தவிர்க்க வேண்டும்
* தேர்தல் பிரசாரத்திற்கு, மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது
* ஊழல் நடவடிக்கை, வாக்காளர்களுக்கு லஞ்சம், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
* மற்ற கட்சிகளின் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில், தொண்டர்கள் ஈடுபடாமல் இருப்பதை, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு விதிகள்?
* அமைச்சர்கள், தங்கள் அரசு அலுவல் பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது. அரசு இயந்திரத்தையோ, ஊழியர்களையோ, பயன்படுத்தக் கூடாது
* ஆளும் கட்சிக்கு ஆதரவாக அரசு விமானங்களையோ, வாகனங்களையோ, இதர அரசு இயந்திரங்களையோ, அரசு ஊழியர்களையோ பயன்படுத்தக் கூடாது
* ஓய்வு இல்லங்கள், விடுதிகள் மற்றும் இதர அரசு தங்கும் இடங்களை, எந்த கட்சியும் பிரசார அலுவலகமாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

* பல்வேறு இனம், ஜாதி, சமயம், சமூகத்தினர் மற்றும், மொழியினருக்கு இடையே இருந்து வரும் வேற்றுமைகள், வெறுப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளிலோ, பதற்றத்தை கூடுதலாக்கும் நடவடிக்கைகளிலோ, எந்த கட்சியும், வேட்பாளர்களும் ஈடுபடக் கூடாது

* அரசு அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக புகார் வராத வகையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்

திரும்பி சென்ற அரசு கார்கள்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சென்னை தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா படங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. அரசு அலுவலகங்களில், முதல்வர் படத்தையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை திருச்சியிலிருந்து விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களை ஏற்றி செல்வதற்காக அரசு கார்கள் வந்திருந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அரசு கார்களை திருப்பி அனுப்பினர். அதே விமானத்தில் வந்த, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர் வைகை செல்வனின் காரில் அமைச்சர்கள் ஏறி சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here