திருச்சி,மார்ச்.10 : தனியார் பள்ளிகளை வளர்க்கும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என திருச்சி பிஎல்ஏ ரெசிடென்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கல்வியாளர்கள் சங்கமத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கல்வியாளர்கள் சங்கமத்தினர் சார்பில்
கற்போம் கற்பிப்போம் என்னும் தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் தலைமையில் ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகள்  பின்வருமாறு:
தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்னும் பேரில் தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளிக்கு சேரவேண்டிய மாணவர்களை அரசாங்க பணத்திலே தனியார் பள்ளிகளில் சேர்த்து விடும் முயற்சி  என்பது அரசு பள்ளிகளை கொலை செய்யும் முயற்சிக்கு சமமானது.ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 1.25 இலட்சம் குழந்தைகளை இத்திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசே தாரை வார்க்கின்றது.அரசுப் பள்ளிகளின் அழிவுக்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் இதுவே காரணம் என்பதை மறைத்து ஆசிரியர்கள் மீது பழிபோடுவது கண்டித்தக்க செயல் ஆகும்.இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதுடன  ஆசிரியர் பணியிடங்களும் வெகுவாக பாதுக்கப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க கல்வியை தனியார்மயமாக்குதலை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.எனவே இதனை உடனடியாக நடப்பு கல்வி ஆண்டிலேயே நிறுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தின் மிகப்பெரிய தனியார் பள்ளிகளில் சேர்த்து விடும் நடைமுறையையும், அதற்கு அரசே செலவு செய்யும் நடைமுறையினையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.ஏற்கனவே அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை,  தனியார் பள்ளிகள் தாமே இலவச சேர்க்கை எனும் பெயரில் சேர்த்து வரும் சூழலில்,
 அரசும் அதே நடவடிக்கையில் ஈடுபடுவது அரசுப் பள்ளிகளின் தரத்தை குறைக்கும் செயலாகவே அமைகிறது.எனவே இதனை உடனே தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் ஆங்கில வழிக்கல்வியை முற்றிலுமாக ரத்து செய்து தமிழ்வழிக்கல்வியின் தரத்தை அதிகப்படுத்துவதற்கான சூழலை அதிகப்படுத்த வேண்டும்.தமிழ் வழிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அளிக்கிறேன் என்ற பெயரில் ஆங்கில வழிக் கல்வியையும் முறையாக வழங்காமல்,தமிழ்வழிக் கல்வியையும் முழுவதுமாக கற்பிக்க இயலாமல் ஆசிரியர்களின் கற்பித்தலும்,மாணவர்களின் கற்றலும் பாதிப்பு அடைகிறது.

அதற்குப் பதிலாக முதற்கட்டமாக ஒன்றியத்திற்கு ஓர் ஆங்கில வழிப் பள்ளியினை அரசு மாதிரிப் பள்ளியாக ஏற்படுத்தி தனிக்கட்டிடம்,தனி ஆசிரியர்கள் என தனி ஒதுக்கீடு வழங்கி தமிழகம்  முழுவதும் ஆங்கிலவழிக் கல்வியை அரசாங்கமே வழங்கிட  வகை வேண்டும்.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பல்திறன்மிக்க  அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர் .கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கல்வியாளர்கள் சங்கமத்தினர் செய்திருந்தனர்.

கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் வரவேற்றுப் பேசினார்.
முடிவில் ஆசிரியை திலகவதி நன்றி கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here