மின்வாரிய உதவிப்பொறியாளர்கள் பணி நியமனம் தொடர்பான வழக்கில், தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்ற உத்தரவை நீக்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, “பணிநியமனம் தொடர்பான நடவடிக்கைகள் இறுதித் தீர்ப்புக்கு உள்பட்டது’ என புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த பரணி பாரதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மின் வாரியத்தில் புதிதாக 325 உதவிப்பொறியாளர்கள் தேர்வு செய்வது தொடர்பாக மின்வாரியம் சார்பில் 2018 பிப்ரவரி 14-இல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிக்காக அண்ணா பல்கலைக்கழகம் 2018-இல் நடத்திய எழுத்துத் தேர்வில் நானும் பங்கேற்றேன். இந்நிலையில் எழுத்துத் தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியானது.

மின் வாரியத்தில் பணிபுரிவோர் கேள்வித்தாள் விவரங்களை, தேர்வுக்கு முன்னதாகவே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். இந்த விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி?  என்பது இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில், ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 1,575 பேருக்கு பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வெளியானது எப்படி? எனத் தெரியாமலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டது சட்டவிரோதம். எனவே உதவிப்பொறியாளர் நியமன நடைமுறைக்கும், நியமன உத்தரவு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடும்போது, “மின்வாரிய உதவிப்பொறியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு முடிந்த பின், வினாக்களை தொகுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியாகவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றார்.

இதனைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், மின் வாரிய உதவிப்பொறியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற உத்தரவை நீக்கியதோடு, பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உள்பட்டது என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here