14,988! பிளஸ் 1 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை..தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயா

நமது நிருபர்-புதுச்சேரி மற்றும் காரைக்காலில், 14 ஆயிரத்து 988 மாணவ மாணவிகள், பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த 2017-18ம் ஆண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில், 15 ஆயிரத்து 246 மாணவ மாணவிகள் கடந்த ஆண்டில் தேர்வு எழுதினர். இதில், ஒட்டுமொத்தமாக, 89.35 சதவீதம் தேர்ச்சி கிடைத்தது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 78.39 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. கடந்த கல்வி ஆண்டுடன் ஒப்பிடும்போது, பிளஸ் 1 தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. தற்போது, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 14 ஆயிரத்து 988 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில், மாணவர்களின் எண்ணிக்கை 7,031; மாணவிகளின் எண்ணிக்கை 7,957.புதுச்சேரி பகுதியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுத உள்ள 12 ஆயிரத்து 610 மாணவ மாணவிகளுக்காக 30 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் பகுதியில் தேர்வு எழுதும் 2,378 மாணவ மாணவிகளுக்காக 8 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இவர்களை தவிர்த்து, புதுச்சேரியில் 114 தனித் தேர்வர்களும், காரைக்காலில் 22 தனித் தேர்வர்களும் பிளஸ் 1 பொதுத் தேர்வை இன்று எழுதுகின்றனர்.ஏற்கனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி நடந்து வருகின்ற நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. இதனால், தேர்வு மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் குப்புசாமி கூறும்போது, ‘தேர்வு எழுதுவதற்காக வருகின்ற தேர்வர்கள், மொபைல்போன் உள்ளிட்ட எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் தேர்வர்கள் ஈடுபடக் கூடாது. ஒழுங்கீன செயல்கள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here