பள்ளியில் மின் இணைப்பு துண்டிப்பு

காட்டேரிக்குப்பம்:பொதுத்தேர்வு துவங்கியுள்ள
நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் குடியிருப்புகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வு நேரங்களில் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 18 ஆயிரத்து 500 விவசாயிகளும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆலையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழிலாளர்களுக்கான 18 மாத சம்பளம், விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.இதன் விளைவாக, கடந்த 2017- 18 ம் ஆண்டிற்கான கரும்பு அறவைப்பணி நிறுத்தப்பட்டு, ஆலை மூடப்பட்டது. தொழிலாளர்களுக்கு லே-ஆப் வழங்கப்பட்டுள்ளது. ஆலைக்கு இடம் வழங்கியவர்கள் சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆலை நிர்வாகம், 45 லட்சம் ரூபாய் மின்பாக்கியை செலுத்தாததால், மின்வாரியம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஆலை வளாகம், ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்பு துண்டித்தனர்.இதன் காரணமாக பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பிற்கு, தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவு ஆசிரியர் நியமிக்கப்படாத நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு, தற்போது பள்ளி மற்றும் குடியிருப்புகளின் மின் இணைப்பு துண்டிப்பு, பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதால், பள்ளி மாணவ- மாணவியர்களின் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here